
திருச்சி ஸ்ரீரங்கம் வட உத்தரவீதி பகுதியில் ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “சமீபத்தில் தமிழ்நாடு அரசாங்கத்தில் இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் சனாதன தர்மத்திற்கும், சனாதன தர்மத்திற்கு விரோதமாகவும் பேசிக்கொண்டு இருக்கிறார். ஒரு அரசாங்கத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் ஜாதி, மதம் என வேறுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும். ஆனால் சனாதன தர்மத்தை பற்றி தவறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது. இதுபோன்று செயல்படக் கூடிய அமைச்சர் நமக்குத் தேவையா என யோசிக்க வேண்டும்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் இருக்கக் கூடிய தர்மத்தில் தவறு உள்ளது. ஆகையால் அதை திருத்துகிறேன் என்று கூறி இதுபோல் அவர் அமைச்சராகவும், சனாதனத்தை பற்றியும் பேசட்டும். சனாதன தர்மத்தை பற்றித் தெரியாமல் பேசுபவர்கள் ஒரு ஈசல் கும்பல் ஆகும். திடீரென காணாமல் போய் விடுவார்கள். மேலும் இதுபோல் பேசுபவர்களை நம் நாட்டை விட்டு வெளியே விரட்ட வேண்டும். இந்தியாவில் 125 கோடி மக்கள் இந்து தர்மத்தை பின்பற்றுகின்றோம். 9 சதவீதம் மட்டுமே மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்நிலையில் இந்துக்களுக்கு விரோதமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் நம் நாட்டில் இருக்கக் கூடாது. மேலும் அனைத்து கோவில்களிலும் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக இருந்து வருகிறார்கள். இதில் எதனை இவர்கள் புதிதாக கொண்டு வந்தேன் எனக் கூறுகிறார்கள்.
மேலும், அமைச்சர் உதயநிதிக்கு தைரியம் இருந்தால், ஒரு சர்ச் உள்ளேயோ அல்லது மசூதிக்கு வெளியேயோ சென்று அனைத்து ஜாதியினரும் எனக்கு ஒன்றுதான் எனக் கூற வேண்டும். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தாயார் கோவில் கோவிலாக சுற்றுகிறார்கள், முதலில் அவர் வீட்டில் இருப்பவர்களை அவர்களால் தடுக்க முடியவில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு சனாதன தர்மம் பற்றியும், கலாச்சாரத்தை பற்றியும் கூறி தடுக்க முடியவில்லை. வெளியே சென்று எப்படி தடுக்க அவர்களால் முடியும்.
திமுகவில் ஜாதி அடிப்படையில் தான் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். ஏன் ஜாதி சார்ந்து இல்லாமல் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியது தானே. இதை செய்த பிறகு சனாதன தர்மம், கலாச்சாரம் பற்றி பேசட்டும். இவர்கள் தேர்தல் நெருங்குகிற நேரத்தில் ஜாதிகள் இல்லை எனக் கூறி வருகிறார்கள். சனாதன தர்மம் என்பது நம் நாட்டின் தாய் ஆகும். ஒருவரின் தாயை தவறாக பேசினால் எப்படி கோபம் வருகிறதோ, அதேபோன்று தான் சனாதன தர்மத்தை பற்றித் தவறாகப் பேசினால் கோபம் வரும்.
இந்தியா பெயரை பாரத் என்று மாற்றுவது சரிதான். நமது நாடு பாரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கோவில்களில் உள்ள பணத்தை எடுத்து கோவில் நலனுக்காக செலவு செய்தால் நன்று தான். மேலும் சனாதனம் என்பது ஜாதியை குறிப்பிடவில்லை. நமது கலாச்சாரம், வாழ்க்கை முறையை உணர்த்தும் புனிதமானது ஆகும். ஆகையால் சனாதன தர்மத்தை பற்றித் தவறாக யார் பேசினாலும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்” என்றார்.