Skip to main content

வெளிவராத கூவத்தூர் ரகசியம் என்னிடம் இருக்கு! - தோப்பு அதிரடி

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

 

பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து,  தான் வகித்து வந்த அதிமுக ஜெ. பேரவை மாநில இணைச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை  எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்து வந்தார் தோப்பு வெங்கடாசலம். அதன் பிறகு,  தான் அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதாகவும், தனிப்பட்ட காரணங் களுக்காகவே கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததாக தோப்பு கூறினாலும் மாவட்ட அமைச்சரான கருப்பனுக்கும் தோப்பு வெங்கடாசலத்துக்கும் ஏற்பட்ட கோஷ்டி யுத்தமே இதற்கு காரணம். கருப்பணன்  அமைச்சராகவும் கட்சியில் புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். ஏற்கனவே ஜெ. காலத்தில் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம்.

 

t


 இந்த நிலையில் தனக்கு வர வேண்டிய பதவிகளை கருப்பணன் பறித்துக் கொண்டது தான் தோப்புவுக்கும் கருப்பனுக்கும் ஏற்பட்டுள்ள உட்பகை. 

 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக அதிக ஓட்டு வாங்கி விடக்கூடாது என்று மறைமுகமாக எதிர்க்கட்சிக்கு அமைச்சர் கருப்பணன் பணியாற்றியதாக சில ஆதாரங்களுடன் கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பி வைத்திருந்தார் தோப்பு வெங்கடாசலம். அதன்பேரில் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் கட்சிப் பதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் சென்று ராஜினாமா கடிதம் கொடுத்தார். 


 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமாதானம் பேசியும் பணியாத தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை இன்று பெருந்துறையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கூட்டினார். அப்போது ஆதரவாளர்களில் சிலர் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்க வேண்டும்.  இல்லை என்றால் நாம் தொடர்ந்து இந்த கட்சியில் பணியாற்றி என்ன செய்யப்போகிறோம் என கூற, மேலும் சிலர் நாம் அதிமுகவினர் கட்சியை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் விலக கூடாது எதிர்க்கட்சிக்கு அல்லது வேறு ஏதாவது கட்சிக்கோ நாம் செல்லக் கூடாது என்றும் கூறினார்கள். இறுதியாக பேசிய தோப்பு வெங்கடாசலம் நாம் அதிமுக தொண்டர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. வேறு கட்சிக்கு போகும் சூழல் எல்லாம் இப்போது இல்லை. ஆனால் நமக்கான மரியாதையை இப்போது உள்ள தலைமை கொடுக்கவேண்டும் என்றார். அதன் பிறகு முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம்,  இந்த ஆட்சி எப்படி அமைந்தது என்பது வெளியில் உள்ள உங்களுக்கு தெரிந்ததை விட கூவத்தூர் முகாமில் இருந்த எனக்கு நிறைய தெரியும்.  

  அப்போது சின்னம்மா தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக கொண்டுவந்தார்.  அந்த நேரத்தில் ஏராளமான ரகசிய வேலைகள் நடந்தது .   என் கண் முன்னாலேயே நடந்த சம்பவங்கள் பல உண்டு.   இவையெல்லாம் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்கு தெரியும்.   இப்போது சின்னம்மா குடும்பம் ஒதுக்கி வைக்கப் பட்டாலும் இவரை முதலமைச்சராக அமர வைத்ததே சின்னம்மா தான் அதற்காக நான் சின்னம்மாவுக்கு விசுவாசி என்று கூற விரும்பவில்லை. இருப்பினும் அங்கு மறைக்கப்பட்ட பல ரகசியங்களை நான் வெளியிட்டால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட கூவத்தூர் முகாமில் நடந்த பல விஷயங்கள் என்னிடம் இப்போதும் ரகசியமாகவே  இருக்கிறது.  தேவைப்பட்டால் எப்பொழுது வெளியிட வேண்டுமோ அப்போது வெளியிட தயாராகவே இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார் தோப்பு வெங்கடாசலம்.


கூவத்தூர் முகாம் கூத்து என்பது மர்மம் நிறைந்த கன்னித்தீவு ரகசியம் போல் நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.

சார்ந்த செய்திகள்