Srivaikuntam

ஆற்றங்கரையோரம், சிந்துநதிசமவெளிகள் போன்ற வளமையான, பசுமைப் பரப்பில் தோன்றியதுதான் நாகரீகம். காரணம் ஆற்று நீரைக்கொண்டு மனிதன் விவசாயம் செய்கிறான். தனக்கான உணவைப் பயிரிட்டு ஆரோக்கியமாக வாழப் பழகிய மனிதன் அடுத்தகட்ட நகர்வான புறச்சூழலுக்குத் தள்ளப்படுகிறான். புறச் சூழலில் அவன் நடந்து கொள்வது. அமைக்கப்படும் வாழ்க்கை முறையே ஆற்று நீரைப் போன்று தெளிவாக இருக்கும். அதுவே அவனின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரமாகவும் வம்சாவளிக்கும் விருத்தியாகிறது.

Advertisment

அதனால்தான் ஆற்றோரப் பகுதிகளே உலக நாகரிகத்தின் தொட்டில் என்று கருதப்படுகிறது. அப்படி வாழ்ந்த நம் முன்னோர்களின் நகரங்கள் மண்மூடி மண் மேடாகப் போனது. அவைகளின் எச்சங்கள் இன்றளவும் காணப்படுவதன் மூலம், அகழ்வாராய்ச்சிகளின் வழியே நம் முன்னோர்கள் வாழ்ந்த, புழங்கிய நகரங்கள் பண்டபாத்திரங்கள் ஆதாரமாக வெளிப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் நகரமருகே மண்மேடாகக் காட்சிதரும் ஆதிச்சநல்லூர்,இதனருகே ஒடுகிறது தாமிரபரணி. சுமார் 2,800 ஆண்டுகட்கு முந்தையது. மேலோட்டமாகவே அங்கு முதுமக்களின் தாழிகள் கிடைக்கப் பெற்ற இடம். சமூக ஆர்வலர்கள், தொல்லியல் ஆராச்சியாளர்களின் தொடர் முயற்சியால் கடந்த மே 25 அன்று அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிடப்பட்டு இயக்குனர் பாஸ்கர் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் லோகநாதன் மாணவர்கள் அடங்கிய அகழாய்வுப் பணி துவங்கி 15 இடங்களில் குழி தோண்டப்பட்டு சுமார் 40 பேர் அகழாய்வில் ஈடுபட்டனர்.

Advertisment

ஆய்வின்போது சிறு, சிறு ஓடுகள், வட்டவடிவிலான சமையல் உலைகள் போன்ற அமைப்புகள் தெரிந்ததை ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மனிதர்களின் வாழ்விடம் பற்றி அறிய ஆதிச்சநல்லூர் குளத்துக்கரை, வீரளப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பாண்டியராஜா கோயில் அருகே தோண்டப்பட்ட இடத்தில் முதுமக்கள் தாழிகள், மோதிரம், அகல்விளக்கு, புகைபிடிக்கும் குழாய், வளையல் போன்றவைகள் கிடைத்து ஆவணப்படுத்தப்பட்டன. இறந்தவர்களை இந்தத் தாழியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாகவும் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இவைகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் போதும்தான் பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் தொன்மைகள் வெளிப்படும் என்கிறார்கள். அகழாராய்ச்சி நடக்கும் பகுதிகளை மாவட்டக் கலெக்டரான சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.

ஆதிகால மனிதனின் நாகரீகம் பண்பாடு விரைவில் இந்தத் தலைமுறையினருக்குத் தெரியவரும்.