thoothukudi son and father incident police peoples

Advertisment

முந்தின நாள் இரவில் சப் ஜெயிலில் மகன் மர்மமான முறையில் இறந்துவிட, அடுத்த நாள் அதிகாலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் இறந்துவிட போலீசாரின் கடுமையான தாக்குதலால் தான் இருவரும் இறந்து விட்டார்கள் என காவல்துறைக்கு எதிராக போரட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர் சாத்தான்குளம் பகுதி மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னாளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது இப்படியிருக்க, கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்து சென்றதாகக் கூறப்படுகின்றது.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கி ரத்தப் போக்கு ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கும் பதிவானது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு (22/06/2020) மர்மமான முறையில் உயிரிழக்க, அவரது தந்தையான ஜெயராஜ் அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தந்தை, மகன் இருவரும் அடுத்ததடுத்து உயிரிழந்ததற்குக் காரணம் போலீசாரின் கடுமையான தாக்குதலே என்கின்றனர் உள்ளூர் பொதுமக்கள்.

இதேவேளையில், லத்தியை வைத்து குத்தியதாலே கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு சிகிச்சைப் பலனளிக்காமல் இருவரும் இறந்துள்ளனர் எனத் தகவல் வெளியாக இறந்தவர்களுக்கு நீதி கேட்டு காவல்துறையைக் கண்டித்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் கடையடைப்பு செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒத்துழைப்பாக காவல்துறைக்கு எதிராக மிகப்பெரியப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர் பொதுமக்கள். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.