/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sa2.jpg)
சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸை ரிமாண்ட் செய்யும்போது குற்ற விசாரணை முறைச் சட்டம் (CrPC) மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக செயல்பட்ட, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய புரபோஷனல் காங்கிரஸ் கமிட்டி பிரிவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில்- சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ்- பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஜூன் 20- ம் தேதி காலை 11.45 மணிக்கு, சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். கரோனா தொற்று காலம் என்பதால், மாஜிஸ்ட்ரேட் சரவணன், தனது வீட்டின் முதல் தளத்தில் இருந்தவாறே, ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அப்போது, ஜெயராஜ்- பென்னிக்ஸ் இருவரையும் அழைத்து வந்த போலீசார், மாஜிஸ்ட்ரேட் வீட்டின் வாசல் கதவருகே நிற்க வைத்துக் கொண்டு, கோவில்பட்டியில் ரிமாண்ட் செய்ய வலியுறுத்தி உள்ளனர். மாஜிஸ்ட்ரேட் சரவணனும் வழக்கின் விவரம் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல், கைதிகள் இருவரின் உடல்நிலை குறித்து கருத்து கேட்காமல், போலீசார் ஏதேனும் சித்திரவதை செய்தனரா? என்று கேட்டு குறிப்பிடாமல், அந்த இருவரையும் கோவில்பட்டி சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு பொது மருத்துவமனையில் இறந்தனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட இவ்விருவரின் மருத்துவ பரிசோதனை ஆவணத்தில் காயங்கள் இருந்ததாக பதிவாகியுள்ளன. இருவரின் புட்டத்தில் ஏற்பட்ட காயங்கள் குறித்த குறிப்பு உள்ளதே தவிர, குறிப்பாக மலக்குடல் காயங்கள் பற்றி இல்லை.
கைது செய்யப்பட்ட இருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்ததாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பேரும் கடுமையான தாக்குதல் மற்றும் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளானதற்கு நேரடி சாட்சிகள் உள்ளன. இருவரின் உடலில் ஏற்படுத்திய காயங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற மலக்குடல் இரத்தப்போக்கு, இறுதியில் அவர்களின் மரணத்திற்கு வழிவகுத்து உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரையும் ரிமாண்ட் செய்ய மாஜிஸ்ட்ரேட் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர்களின் உடலில் காயங்கள் தெரிந்தன என்றும், அவர்களின் ஆடைகளில் இரத்தக் கறைகள் இருந்தன என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ch3_44.jpg)
கைது செய்யப்பட்ட இருவரையும் மாஜிஸ்ட்ரேட் சரவணன் இயந்திரத்தனமாக ரிமாண்ட் செய்துள்ளார். மனதைச் செலுத்தாமல், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் செயல்பட்டுள்ளார்.
ராம்தாஸ் Vs தமிழ்நாடு அரசு (1993 Cr LJ 2147) வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவரை 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவை போலீசார் மீறியது குறித்தோ, தன்னிடம் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரிடமும் எவ்வித விசாரணையும் செய்யாமல் ரிமாண்ட் செய்ததன் மூலம், சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட், தனது கடமையில் இருந்து தவறிவிட்டார்.
தன் முன்னால் நேர் நிறுத்தப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சரியாக உள்ளனவா? என்பதை வழக்கு ஆவணங்களை ஆராய்ந்து பார்த்து, அதில் திருப்தி அடையும் பட்சத்தில் ரிமாண்ட் செய்ய வேண்டும் என்பதில் இருந்து, மாஜிஸ்ட்ரேட் சரவணன் தவறிவிட்டார்.
ரிமாண்ட் செய்வது என்பது ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் நீதித்துறையின் அடிப்படை பணியாகும். அந்தப் பணியை செய்யும் சமயத்தில், ஒரு மாஜிஸ்ட்ரேட், தன் முன்னால் வைத்துள்ள ஆவணங்கள் போதுமானதுதான், ரிமாண்ட் செய்வதற்கு தகுதி வாய்ந்தவைதான் என்பதில் திருப்தி அடையும்பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை சிறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கில், மாஜிஸ்ட்ரேட் சரவணன், ரிமாண்ட் செய்வதற்கு முன்பு மேலே சொன்ன காரணிகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. இயந்திரத்தனமாக செயல்பட்டு, அவ்விருவரையும் ரிமாண்ட் செய்துள்ளார். ஜாமினில் வெளிவரக் கூடிய குற்றச்சாட்டுகளின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அந்த இருவரையும் ரிமாண்ட் செய்வது தேவைதானா? என்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரம், குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி மாஜிஸ்ட்ரேட்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதைச் செயல்படுத்துவதில் இருந்தும் மாஜிஸ்ட்ரேட் சரவணன் தவறிவிட்டார்.
தன் முன்னால் ஆஜர்படுத்தப்பட்ட அவ்விருவரிடம், அவர்கள் தரப்பு கருத்தைச் சொல்வதற்கான வாய்ப்பை வழங்க மாஜிஸ்ட்ரேட் தவறி விட்டார். போலீஸ் பிடியின் அச்சத்தில் இருந்து விடுபட்டு, மாஜிஸ்ட்ரேட் முன்பு கைதிகள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று பால் கிருஷ்ணா Vs பேரரசர் (1932, 33 CrLJ 180). ஷீலா பார்ஸ் Vs ஸ்டேட் ஆஃப் மகாராஷ்டிரா (1983 AIR 378, 1983, SC R (2) 337), வழக்குகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்புகளில், கைதிகளிடம் சித்திரவதை அல்லது துன்புறுத்தல் புகார் ஏதேனும் இருக்கிறதா? என்று விசாரிக்க வேண்டும். குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 54 -ன் கீழ், ரிமாண்ட் செய்யப்பட்டவரின் மருத்துவத் தேவை குறித்து கேட்டறிய வேண்டும் என்ற பணியில் இருந்தும் மாஜிஸ்ட்ரேட் தவறிவிட்டார்.
கைது நடவடிக்கையின் போது, டி.கே.பாசு Vs மேற்கு வங்க மாநில அரசு (1997 1 SCC 416) வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை போலீசார் கடைப்பிடித்தனரா? என்பதை ஆராய மாஜிஸ்ட்ரேட் தவறிவிட்டார். சாத்தான்குளம் போலீசாரை மிரட்டியதான குற்றச்சாட்டின் பேரில், கைது செய்யப்பட்ட இருவரும், அதே போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்ததன் நேர்மைத் தன்மை குறித்து, மாஜிஸ்ட்ரேட் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டார்.சட்டத்தை அமலாக்கம் செய்யும் போலீசாரின் சித்திரவதைச் செயல்கள் சமீபகாலமாக அதிகரிப்பதும், அதைத் தடுக்க வேண்டிய முன்களப்பணி வரிசையில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட்கள், உச்சநீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளின்படி, தங்கள் பணியை செய்யத் தவறுவதால்தான், இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
ஆகவே, சட்டப்படி தனது கடமையை செய்யத் தவறிய சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் சரவணன் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 167 மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், கைதிகளை ரிமாண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென,அனைத்து மாஜிஸ்ட்ரேட் களுக்கும் உத்தரவிட வேண்டும்.‘ என்று குறிப்பிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)