Skip to main content

துப்பாக்கி சூடு சம்பவம்: எடப்பாடி உருவபொம்மையை எரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு!

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
eps

 

 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால் இன்னும் பலர் உயிரிழக்கும் முன்பே ஆலையை நிரந்திரமாக மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் திரள் போராட்டம் தொடங்கி நடந்த நிலையில் மாநில அரசு சுற்றுசூழல் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று சமாதானம் சொன்னது.

ஆனால் மத்திய அரசு சுற்றுசூழல் அனுமதி கொடுத்ததால் ஆலை தொடர்ந்து இயங்கி வந்தது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி முதல் மக்கள் திரள் போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து 99 நாட்கள் நடந்த மக்கள் போராட்டத்தை மாநில எடப்பாடி அரசு மதிக்கவில்லை. அதன் விளைவு 100வது நாள் போராட்டத்திற்கு அமைதியாக பேரணி நடத்த திரண்ட மக்களை தடுத்து நிறுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்தனர். இதில் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் போலீசார் பொதுமக்களிடையே மீண்டும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்தனர். அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் தூத்துகுடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கல்வீச்சை தொடர்ந்து போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காளியப்பன் (22) என்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தகவல்கள் உடனுக்குடன் சமூகவலைதளங்களில் பரவுவதால் இதனை தடுக்கும் போக்கு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவின் பேரில் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்று சூழல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு தமிழகமே கொந்தளித்துள்ளது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 


இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொத்தமங்கலத்தில் திரண்ட இளைஞர்கள், விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டதுடன் முதல்வர் எடப்பாடி உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அவர்கள் 30பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதும் வழக்கு போட்டு நீதிமன்றத்திற்கு இழுத்தனர். மக்களுக்காக போராடினால் வழக்கு போட்டு போராட்டத்தை முடக்க நினைக்கிறது எடப்பாடி அரசு. எவ்வளவு தடை விதித்தாலும் மக்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராடிய இளைஞர்கள்.

சார்ந்த செய்திகள்