தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தின் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரான கருணாகரன் ஜூலை 22 திங்கள்கிழமை மாலை தனது தோட்டத்திலிருந்து காரில் திரும்பும்போது மர்ம நபர்களால் வெட்டிக் கொலைப்பட்டார். பின்னணியில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ஆரம்பத்தில் அ.தி.மு.க.வில் இருந்த கருணாகரன் அப்போதைய தூத்துக்குடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான வி.பி.ஆர். ரமேஷின் உதவியாளாராக இருந்தவர். எம்.எல்.ஏ. சென்னையில் இருந்தாலும் அவர் சார்பில் அந்தப் பகுதியில் பொறுப்புகளைக் கவனிப்பவர் கருணாகரன். அரசியலில் வளர்ந்தார். இதனால் இவரால் எம்.எல்.ஏ. ரமேஷின் தம்பி வி.பி.ஆர். சுரேஷ் ஒரங்கட்டப்பட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krunakaran 01.jpg)
பின்னர் தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியசாமியின் ஆசியால் தி.மு.க.வில் இணைந்ததோடு தூத்துக்குடி ஒன்றியத்தின் தலைவருமானார். தன் பகுதியில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டார். பெரியசாமியின் மரணத்திற்குப் பின்பு தி.மு.க. தெ. மா.செ. அனிதாராதாகிருஷ்ணனின் ஆதரவாளானார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krunakaran 03.jpg)
நிலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக கருணாகரன் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பலனடைந்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொதிப்படைந்தனர். மேலும் கிராமத்தின் கோயில் கொடை தொடர்பானவைகளின் கோவிலின் முக்கிய புள்ளிகளோடு கருணாகரன் மோதியதுண்டு. தாரங்கதாரா ஆலை ஒன்றிற்கு எரிவாயு குழாய் அமைப்பு பணிக்கு ஒரு கிராமமே எதிர்த்தது. அந்த விவகாரத்தில் அந்த ஆலைக்கு ஆதரவாக விவசாயிகளை எதிர்த்தார் கருணாகரன். இதனால் அவர் பலனடைந்தது அப்பகுதியில் விவசாயிகளுக்குப் பிடிக்கவில்லை.
இந்தச் சூழலில் கருணாகரனின் ஆதரவு கோஷ்டியே இவரை எதிர்த்திருக்கிறது. இதுபோன்று பல காரணங்கள் பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்த நிலையில் தான் கருணாகரன் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ், முருகேசன் மகன் ரமேஷ், பூலோகபாண்டி மகன் இளையராஜா, ராஜலிங்கம் மகன் பாண்டி, தங்கராஜ் மகன் ராஜலிங்கம், பாலகிருஷ்ணன் மகன் சண்முகஜோதிவேல் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சண்முகஜோதிவேல் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us