Skip to main content

காத்திருந்து முடித்த பகை.!! கொலையாளிகளுக்கு கை கொடுத்ததா போலீஸ்..?


 

ஆயுதம் தூக்கியவன் ஆயுதத்தாலயே அழிவான் என்பது வழக்கு சொல். அதை மெய்ப்பிக்கும் வகையில் பழிக்குப்பழியாக அதே ஆயுதத்தாலேயே அழிக்கப்பட்டுள்ளான் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் தூத்துக்குடியில் பிரபல தாதாவாக வலம் வந்தவனுமான சிந்தா எனும் சரவணன். இதற்கு பின்னணியில் காவல்துறை இருக்கலாம் என்பது தான் சர்ச்சைக்குரியதாகியுள்ளது.

 

saravanan nellaiதூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த சிந்தா எனும் சரவணனுக்கு அவ்வவ்ப்போது மீன்பிடித் தொழிலும், தினசரி கட்டப்பஞ்சாயத்தும் செய்து வருவது தான் வழக்கமான ஒன்று. முதல் மனைவி பிரியாவை விட்டு பிரிந்து, இரண்டாம் மனைவி கார்த்திகாவுடன் குடும்பம் நடந்தி வந்துள்ளான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைத்தண்டனையிலிருந்து வெளிவந்து, தனது பாதுக்காப்பு கருதி கேவிகே நகரில் குடிபெயர்ந்துள்ளான். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மக்கும்பல் இவனை வீட்டியேலேயே வைத்து வெட்டித் துண்டாக்கி கொன்று போட்டது. சம்பவ இடத்தினைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி. அருண்பால கோபாலன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரப்பரப்பை உண்டாக்கியது. கொலையுண்ட சிந்தா எனும் சரவணன் மீது 2009ம் ஆண்டு முன்னாள் பாமக பிரமுகர் காசிப்பாண்டியனைக் கொலை செய்த வழக்கு, 2016ம் ஆண்டு சாயல்குடியில் பட்டுராஜனை கொலை செய்த வழக்கு, ஆறுமுகநேரியில் ஒரு கொலை வழக்கு, நாகர்கோவிலில் ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட  11 வழக்குகள் உள்ளன. இதில் சாயல்குடியில் கொல்லப்பட்ட பட்டுராஜன் தரப்பே இதனை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர் போலீசார்.
 

 
இது இப்படியிருக்க, " தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த சுப்பிரமணிய நாடாரின் மகனான பட்டுராஜ் ஆரம்பத்தில் பந்தல் தொழில் செய்யும் வேலையை செய்து வந்திருக்கிறான். 80களின் இறுதிகளில் அந்தப் பகுதியில் திண்டுக்கல்லில் கொலையுண்ட பசுபதி பாண்டியனுக்கும், அங்கு காமராஜர் மக்கள் கழகம் என்ற அமைப்பினை நடத்தி வந்த காக்கா மண்டையன் செல்வராஜ் நாடாருக்கும் மோதல்கள் வெடித்துக் கொள்ளும். அது சாதி மோதலாக மாற்றப்பட்ட நேரத்தில் பட்டுராஜ் காக்காமண்டையனுடன் சேர்ந்து பசுபதிப் பாண்டியனை எதிர்த்து வந்தான். அலங்காரத்தட்டில் வீட்டைக் காலி செய்யும் பஞ்சாயத்தில் பங்கு பிரிப்பதில் காக்கா மண்டையனுக்கும், பட்டுராஜூவுக்கும் மோதல் ஏற்பட பாளையங்கோட்டையை சேர்ந்த கராத்தே செல்வின் நாடாரின் இயக்கத்தில் சேர ஆரம்பித்து, அவரை முன்னிறுத்தி தூத்துக்குடியில் மாநாடே போட்டான். அதே காலக்கட்டத்தினில் பசுபதி பாண்டியனுக்கும், காக்காமண்டையனுக்கும் பிரச்சனைகள் முற்ற, பசுபதிபாண்டியனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு காக்காமண்டையனின் தம்பி மரியான்ஸ் நாடாரைக் காட்டிக் கொடுக்க கொல்லப்பட்டான் மரியான்ஸ் நாடார். அதுவே காக்காமண்டையனுக்கும், பட்டுராஜூவுக்கும் நிரந்தரப் பகையாக மாறியது.


 


    இதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட உளவுத்துறையினர் இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடுகளை அதிகரிக்கும் வகையில் பட்டுராஜை காக்காமண்டையன் செல்வராஜூவுக்கு எதிராக தூண்டி விட, எந்த வழக்கில் பட்டுராஜ் சிக்கினாலும் உன்னை காக்காமண்டையன் தான் சிக்க வைத்தார் என்று கூறியதோடு பகையை அதிகரிக்கவும் செய்தனர். ஒருக்கட்டத்தில் தூத்துக்குடியில் வாழமுடியாத நிலை பட்டுராஜூவுக்கு. பொறுத்தப் பார்த்த பட்டுராஜ் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி காமராஜர் பிறந்த நாளான்று தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தில் நடந்த விழாமேடையில் வைத்து வெடிகுண்டுகளை வீசி காக்காமண்டையனை கொலை செய்தனர். மரியான்ஸ் நாடாரின் மகன் ஹெர்குலிஸூம், காக்கா மண்டையனின் மகன்கள் சுகந்தன், வசந்தன் ஆகியோரும் இணைந்து பட்டுராஜை தீர்த்துக்கட்ட காத்திருந்த நேரத்தில் ஜூன் 2016 அன்று பட்டுராஜை சாயல்குடி கன்னிராஜபுரத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்தது தற்பொழுது கொலையுண்ட சிந்தா எனும் சரவணன். பட்டுராஜ் தரப்போ காத்திருந்து தற்பொழுது சிந்தா எனும் சரவணனை வேட்டையாடி குதறிப் போட்டுள்ளது. இத்தனை கொலைகளுக்கும் காரணம் போலீசே..!" என்கின்றனர் தூத்துக்குடி மாநகர ரவுடிகள். காவல்துறை தான் பதிலளிக்க வேண்டும்..!


 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்