Thoothukudi double incident; 8 people arrested

தூத்துக்குடி இரட்டை கொலை சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் சென்பகா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சதீஷ் மாதவன்(21). ரேஷன் அரிசி வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் வள்ளுவர் நகர் சலவை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் தினமும் கூடி மது அருந்தி வந்து உள்ளார். இதை அப்பகுதியைச் சேர்ந்த ரத்தினம், ஆனந்தன் மற்றும் அவரது மகன் பிரகதீஸ்வரன் ஆகியோர் கண்டித்துள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் தகராறும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரத்தினம் அளித்த புகாரில் கிழக்கு காவல் நிலையத்தில் சதீஷ் மாதவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வள்ளுவர் நகர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது சதீஷ் மாதவன் உள்ளிட்ட சிலர் அந்த பேனரை கிழித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவ்வழியாக பைக்கில் வந்த சதீஷ் மாதவனை, ஆனந்தனும் அவரது மகன் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட சிலரும் எச்சரித்துள்ளனர்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மாதவன் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது தொடர்பாக ஆனந்தன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாருக்கு ஏப்ரல் 29ஆம் தேதி புகார் ரசீது போட்டு கொடுத்துவிட்டு போலீசார் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்புக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்றிரவு இரவு 9 மணி அளவில் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சதீஷ் மாதவன் தனது நண்பர்கள் 5 பேருடன் மது அருந்திவிட்டு விட்டு வெளியே வந்துள்ளார். அங்கு டாஸ்மாக் கடை வாசலில் பிரகதீஸ்வரனை பார்த்ததும் சதீஷ் மாதவனும் அவனது கூட்டாளிகளும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரகதீஸ்வரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரகதீஸ்வரன் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்ற 30 நிமிடங்களில் பிரகதீஸ்வரன் ஆதரவு கோஷ்டியினர், புதுக்கிராமம் சென்பகா நகரில் உள்ள சதீஷ் மாதவனின் வீட்டுக்குச் சென்று அங்கு அவரது அம்மா கஸ்தூரியை வீட்டு வாசலில் வைத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலிலேயே சரிந்து விழுந்தார். கஸ்தூரியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த கஸ்தூரியின் உறவினர் சென்பகராஜ் என்பவரின் கையையும் அக்கும்பல் வெட்டியது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரியின் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த செண்பக ராஜை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முன் விரோதம் காரணமாக ஒரு கொலையும், பழிக்கு பழியாக 30 நிமிடத்தில் மற்றொரு கொலை என அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு கொலை சம்பவங்கள் , தடுக்க வந்தவருக்கு கையில் வெட்டு ஆகியவை கோவில்பட்டி நகரில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டார்.

Advertisment

பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில் எட்டு பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.