
நள்ளிரவு வாகன சோதனையின்போது குடிபோதையில் சரக்கு வாகனம் இயக்கியவரிடமிருந்து சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்த எஸ்.ஐ.யை, கூட்டாளிகள் உதவியுடன் மற்றொரு சரக்கு வாகனம் கொண்டு ஏற்றிக் கொலை செய்துள்ளார் குடிபோதை நபர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்தவர் பாலு. ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் நள்ளிரவு வாகனச் சோதனைக்காக இவருக்குப் பணி ஒதுக்கப்பட்ட நிலையில், சரக்கு வாகனம் இயக்கி வந்த ராஜகோபால் மகன் முருகவேல் நிறுத்தப்பட்டிருக்கிறார். வழக்கமான சோதனையில், வாகனம் இயக்கி வந்த முருகவேல் மிகுந்த குடிபோதையில் இருப்பது தெரியவர, அவரிடமிருந்து வாகனத்தைப் பறிமுதல் செய்த எஸ்.ஐ. ஓட்டுநரை எச்சரித்து அனுப்பியிருக்கின்றார்.

இந்நிலையில் நள்ளிரவு 02.00 மணிக்கு கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்துகொண்டு, மற்றொரு சரக்கு வாகனத்தை இயக்கி வந்து, "போலீஸ்ன்னா திமிராலே.! என் வாகனத்தையே தூக்குறீயே.?" என வாகனச் சோதனை செய்துகொண்டிருந்த எஸ்.ஐ.பாலு மீது வாகனத்தை ஏற்றிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடியுள்ளார் முருகவேல். நள்ளிரவு நடந்த கொலையால் ஏரல் காவல் நிலைய போலீஸார் மட்டுமின்றி தமிழக காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்க, 10 தனிப்படைகளை அமைத்து கொலையாளியைத் தேடி வருகிறது மாவட்டக் காவல்துறை.
1988- ஆம் ஆண்டில் காவல் பணியில் இணைந்த எஸ்.ஐ. பாலு, தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.