thoothukudi district, sri vaikuntam congress party leader peoples vehicles

தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கவில்லை. ஆனால், காங்கிரஸுக்கான பாரம்பரிய தொகுதிகளை அக்கட்சிக்கு தி.மு.க ஒதுக்கிவிடும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நம்பிக்கையைக் கட்சி நிர்வாகிகளிடமும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்படுத்தியிருப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த பலரும் தொகுதிக்குள் வலம் வருகிறார்கள். அப்படி வலம் வருவதில் முன்னணியில் இருக்கிறார் இளைஞர் காங்கிரஸின் முதன்மை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மறைந்த ஊர்வசி செல்வராஜின் மகனுமான ஊர்வசி அமிர்தராஜ்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான ஸ்ரீவைகுண்டம் தொகுதியை குறி வைத்து களமிறங்கியுள்ளார் ஊர்வசி அமிர்தராஜ். இதுவரை மூன்று முறை தொகுதி முழுக்க வலம் வந்துள்ள ஊர்வசி அமிர்தராஜ், மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து இதுவரை 2 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செய்து முடித்துள்ளார். கடந்த இரு வாரங்களாக தேர்தல் பணிகளை தொகுதிக்குள் துவக்கியிருக்கும் அவர், நேற்று பெரிய தாழை கிராமத்தில் 20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை காங்கிரஸ் சார்பில் நடத்தியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களை இலவசமாக வழங்கினார் ஊர்வசி அமிர்தராஜ்.

தேர்தலை மையப்படுத்தி காங்கிரஸ் நடத்தும் இத்தகைய நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதனை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரஸுக்கு தி.மு.க. உறுதி செய்து விட்டதா? என ரகசியமாக விசாரித்திருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்.

Advertisment