
கோவை செல்வபுரம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதியின் வாகனம் மீதுஅதிமுக மற்றும் பாஜகவினர் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு நேற்று (06.04.2021) காலை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி உரிய அனுமதி பெற்ற காரில் வந்தார். வாக்குச்சாவடி மையத்தைப் பார்வையிட்டு அவர் திரும்பினார்.
அப்போது, அங்கு கூடியிருந்த அதிமுக மற்றும் பாஜகவினர் அவரை தடுத்து நிறுத்தி ''ஏன் இங்கு வந்தீர்கள்'' என கேள்வி எழுப்பி தாக்க முயன்றனர். மேலும், தலையை வெட்டிவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையில், அவரின் வாகனத்தை அதிமுக தொண்டர்கள் தாக்கினர். இதில், அவரின் வாகனம் சேதமடைந்தது. உடனடியாக, கார்த்திகேய சிவசேனாதிபதி வேறு காரில் ஏறி சென்றார். இதையடுத்து, அங்கு திமுகவினர் குவிந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸ் கமிஷனர் டேவிட் தேவாசீர்வாதம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். அதன்பின், திமுகவினர் பேரணியாக நடந்து சென்று செல்வபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளரை ஏன் அனுமதிக்கவில்லை என போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக செல்வபுரம் பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)