
நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது அங்குள்ள சூழல் குறித்து கடந்த செப்.19- ஆம் தேதி செய்தி சேகரிக்கச் சென்றனர். அவர்கள் இருவரும் செய்தி சேகரித்து விட்டு வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவர்களை பின்தொடா்ந்து 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தி வாகனத்தின் கண்ணாடியை உடைத்து செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் புகைப்பட கலைஞர் அஜித்குமார் இருவரையும் தாக்கினார்கள்.
இதில் காயமடைந்த இருவரும் ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர்.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் புகைப்பட கலைஞர் அஜித்குமார் இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கனியாமூர் பள்ளி மாணவி சிறீமதி தொடர்பான உண்மைகளைத் துணிவாக வெளிச்சப்படுத்தி வரும் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அவருடன் படம்பிடிக்கச் சென்ற அஜித் ஆகியோர் மீது பள்ளி நிர்வாகத்தைச் சார்ந்த வன்முறைக் கும்பல் அண்மையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.
அதனால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிரகாஷ் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் வீடுதிரும்ப வேண்டுமென வாழ்த்துகிறேன்.
கனியாமூர் பள்ளியிலிருந்து 20 கி.மீ.க்கும் மேல் பின்னாலேயே விரட்டி வந்து தாக்கியுள்ளது அக்கும்பல். எவ்வளவு குரூரமான கொலைவெறித்தனம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.