Skip to main content

சிறப்பாகப் பணி செய்தமைக்காக திட்டக்குடி வட்டாட்சியருக்கு விருது!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

thittakkudi



திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலப் பாதுகாப்பு வட்டாட்சியராகப் பணி செய்துவருபவர் ரவிச்சந்திரன்.

 

இவர் ஏற்கனவே விருத்தாசலம் கோட்டாட்சியரின்  நேர்முக உதவியாளராகவும் வட்டாட்சியர் ஆகவும் வருவாய்த்துறையில் பணியாற்றியவர். தற்போது திட்டக்குடியில் சமூகநல வட்டாட்சியராகப் பணி செய்து வருகிறார். ஏழை எளிய மக்களிடம் அரசின் உதவிகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதிலும் அந்த உதவிகள் தகுதியுள்ள பயனாளிகளுக்குக் கிடைத்திட வழிவகை செய்து வருவதோடு பயனாளிகளிடம் அன்பாகவும் எளிமையாகவும் பேசி அவர்களின் தேவைகளை, குறைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உடனுக்குடன் செய்துகொடுத்து வருகிறார். அதேபோன்று திட்டக்குடி வட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு சிக்கலான பிரச்சனைகளையும் சுமுகமான முறையில் ஏற்கனவே பலமுறை தீர்த்து வைத்தவர்.

 

அதிகாரி என்ற தோரணை இல்லாமல் மக்களிடம் எளிமையாகப் பழகுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவருக்கு நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நடைபெற்ற 72வது சுதந்திர தின விழாவில், சிறப்பாகப் பணி செய்தமைக்காக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி விருது வழங்கிப் பாராட்டியுள்ளார். விருது பெற்ற சமூக நல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு திட்டக்குடி பகுதிவாழ் மக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Bribery for change of belt The tahsildars were caught in the dark

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் முசிறியில் வசித்து வருபவர் கோபால் மகன் கிருஷ்ணன் (வயது 40). இவர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும் ஒரு காலியிடமும் உள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய்த் துறையிலிருந்து பட்டா பெறப்படவில்லை. அதனால் கிருஷ்ணன் தனது தாயார் பெயரில் மேற்படி இரண்டு இடத்திற்கும் பட்டா பெறுவதற்காக முசிறி வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கடந்த பிப்ரவரி (2023) மாதத்தில் மனு செய்துள்ளார்.

மேலும் தனது பட்டா சம்பந்தமாக கிருஷ்ணனுக்கு எந்த தகவலும் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெறாததால் கிருஷ்ணன், முசிறி கிழக்கு பகுதி விஏஓ அலுவலகம் சென்று விஏஓ விஜயசேகரை சந்தித்து தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஏஓ விஜயசேகர் உங்க இடத்தை மண்டல வட்டாட்சியர் வந்து பார்வையிட வேண்டும் என்று கூறியுள்ளார். பின் நவம்பர் மாதத்தில் விஏஓ ராஜசேகர் முசிறி மண்டல வட்டாட்சியர் தங்கவேலை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனின் இடத்தைப் பார்வையிட்டு விட்டு தாலுக்கா அலுவலகம் வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

அதன் பேரில் கிருஷ்ணன் நேற்று (26.12.2023) மாலை 6 மணி அளவில் முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்று மண்டல வட்டாட்சியர் தங்கவேலை சந்தித்து தனது பட்டா குறித்து கேட்டுள்ளார். அப்போது மண்டல வட்டாட்சியர் தங்கவேல் கிருஷ்ணனிடம் உங்களுக்கு இரண்டு இடத்திற்கும் பட்டா பெற்றுத் தருவது என்றால் ஒரு பட்டாவுக்கு 15 ஆயிரம் வீதம் இரண்டு பட்டாவுக்கு முப்பதாயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளார். கிருஷ்ணன், தொகையை குறைத்துக் கூறுமாறு மண்டல வட்டாட்சியரிடம் கேட்டதன் பேரில் மண்டல வட்டாட்சியர் 5 ஆயிரம் குறைத்துக் கொண்டு 25 ஆயிரம் கொடுத்தால்தான் பட்டா பெற்றுத் தர முடியும் என்று கண்டிப்பாகக் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன், திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்குச் சென்று அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்று (27.12.2023) மாலை 5:30 மணி அளவில் கிருஷ்ணனிடம் இருந்து மண்டல வட்டாட்சியர் தங்கவேல் லஞ்சப் பணம் 25 ஆயிரத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ் பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மண்டல வட்டாட்சியர் தங்கவேலை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். 

Next Story

ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம்; தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Eral Regional Commissioner post change; Thoothukudi collector in action

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தல், சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்திய ஆட்சிப் பணியில் மூத்த அலுவலர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாகத் துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்குத் தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை முறையாகச் செய்யாத ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏரல் வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.