/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amstrong-art_5.jpg)
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் இந்த வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல்களையும், அதற்கான சதி திட்டம் தீட்டிய இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதுகுறித்தும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை இன்று (14.07.2024) அதிகாலை புழல் வெஜிடேரியன் நகருக்கு அழைத்துச் சென்று தடயங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கண்டறிவதற்காக காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர்களின் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்று, அப்பகுதியில் உள்ள இரும்பு தகடு வேயப்பட்ட சிறு கூரையின் உள்ளே பதுங்கிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/en-tthiruvengadam-art_0.jpg)
அப்போது சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தும் சரணடையாமல் வெளியே வர மறுத்து தப்பி செல்ல திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு திருவேங்கடத்தின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கே - 1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் சென்னை குன்றத்தூர், பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் திருவேங்கடம் (வயது 33) உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gcp-off-art.jpg)
இவ்வாறு கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அதில் திருவேங்கடம் இந்த கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு உள்ளிட்ட ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று (14.07.2024) அதிகாலை போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக எம் - 3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நிதிபதி விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)