Skip to main content

பல விதமான கெட்டப்; யூடியூப் பார்த்து சம்பவம் செய்த இளைஞர் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Thiruvarur teenager who was involved in theft sentenced to 3 years in jail

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள கொல்லாபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் 77 வயதான தனபுஷ்பம். கடந்த 2021 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீட்டின் முன்பக்க கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டின் கொல்லைப்புறத்தில் முருங்கை கீரை பறித்து விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர் தனபுஷ்பத்தை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். கீழே விழுந்ததில் காயமடைந்த பாட்டியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைக் கேள்விப்பட்ட பேரளம் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராகவும், தற்போதைய ஆய்வாளரான சுகுணா, மருத்துவர்களிடம் பேசி பாட்டி தனபுஷ்பத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கச் செய்ததோடு, அவரிடம் புகார் பெற்று வழக்குப் பதிவுசெய்து அதிரடியாக விசாரணையைத் துவங்கினார்.

சி.சி.டி.வி காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், கீரனூரைச் சேர்ந்த விஜய் என்கிற இளைஞன் கொரியர் கொடுப்பதுபோல, தனபுஷ்பம் பாட்டியின் வீட்டை பலவேடங்கள் அணிந்து நோட்டமிட்டு, இறுதியில் முஸ்லிம் பெண் போல் கருப்பு புர்கா அணிந்து திருடிச் சென்றதை கண்டுபிடித்தார், பிறகு நகையைத் திருடிய விஜய் சென்னையில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து, கைது செய்து, நகையை மீட்டு பாட்டியிடம் கொடுத்தார்.

அப்போது திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை செயல்பட்ட விதம் பொதுமக்களே பாராட்டும் வகையில் இருந்தது. அதிரடியாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சுகுணாவையும் சக காவலர்களையும் மாவட்ட எஸ்.பி.யும், நன்னிலம் டி.எஸ்.பி.யும் பாராட்டியுள்ளனர். கைதான விஜய் திருட்டில் ஈடுபடுவதற்காக, திருடுவது எப்படி என இணையதளத்தில் பார்த்து திருடச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எப்படி திருடினார், என்ன நடந்தது, எப்படி பிடித்தார்கள் என பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா அப்போது கூறியது, “கொரியர் போடுற வேலை பார்க்குற அந்தப் பையனோட அப்பாவுக்கு இரண்டு மனைவி, நிறைய பிள்ளைங்க, பாட்டி, தாத்தான்னு குடும்ப மெம்பர்ஸ் அதிகமாம். தீபாவளிக்கு ஊரே புது துணி, பட்டாசோட கொண்டாடுறத பார்த்து, நம்ம குடும்பத்துல நடக்கலயேன்னு வருத்தப்பட்டு, திருடியாவது இதையெல்லாம் செய்யணும்னு முடிவெடுக்குறார். அப்போதான் கொரியர் போடுற மாதிரி வயதான பாட்டி இருக்குற வீட்ட நோட்டமிட்டுள்ளார். ஒரே மாதிரி வந்தா சந்தேகம் வரும்னு யூடியூப்ல திருடுவது எப்படின்னு தேடிப்பிடித்து, அதுல கிடைத்த தகவலின்படி முஸ்லிம் பெண்போல வேடமணிந்து போக முடிவெடுத்து, புர்காவோடு வீட்டிற்குள் புகுந்து நகையைத் திருடியுள்ளார். அக்கம்பக்கத்துல விசாரிச்சா, பெண்ணுன்னுதான் தெரிஞ்சது, ஆனாலும் சிசிடிவிய ஆய்வுசெய்து கண்டுபிடித்தோம்” என்றார். அந்த வழக்கு நன்னிலம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடந்துவந்தது.

இந்தநிலையில், திருட்டில் ஈடுபட்ட விஜய்க்கு இன்று 2.1.24ஆம் தேதி நன்னிலம் குற்றவியல் நடுவர் பாரதிதாசன், மேற்கண்ட குற்றத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10000 அபராத தொகையும், அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்த வழக்கில் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டி கொடுத்த ஆய்வாளர் சுகுணாவையும், மற்றும் செந்தில்குமாரையும் அரசு வழக்கறிஞர் பாரட்டினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ராஜேஸ் தாஷுக்கு சிறைத்தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Former DGP Rajesh Das gets 3 jail sentence

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி, அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கத் தடையில்லை. நீதிமன்றத்தை மாற்றக் கோரிய ராஜேஷ்தாஸ் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை” எனக் குறிப்பிட்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு மீதான் விசாரணை விழுப்புரம் முதன்மை நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12 ஆம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார். 

அதன்படி இன்று, ராஜேஷ்தாஸின் மேல்முறையீட்டு வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.