thiruvarur school student harish electricity incident

Advertisment

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கடுவங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் மகன் ஹரிஷ் (வயது 17). இவர் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், புழுதிக்குடி ஊராட்சியில் உள்ள சோழங்கநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் அலங்கார மின் விளக்கு அமைக்கும் வேலைக்கு சென்றுள்ளார்.

அப்போது மழைநீரில் நின்றபடி மின் விளக்குகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஹரிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பற்றி அறியாத அவரது உறவினர்கள் ஹரிஷை பல மணி நேரம் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். அதன் பிறகு தான் ஹரிஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அவரது உறவினர்களுக்கு தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரபாண்டியம் போலீசார் ஹரிஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.