Skip to main content

நஞ்சில்லா உணவுக்கு நாட்டுக்காய்கனி மாடித்தோட்டமே சிறந்தது...

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய மாடித்தோட்டம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி திங்கட்கிழமை, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. 
 

environment


பயிற்சி முகாம் என்ற அறிவிப்பை பார்த்து திருவாரூர் மற்றும் தஞ்சை, நாகை மாவட்டங்களில் இருந்தும் 100 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து கலந்து கொண்டனர். இப்பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.ராமசுப்ரமணியன் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்து  பேசினார்.

அப்போது அவர், இன்று நாம் அன்றாடம் கடைகளில் வாங்கி உண்ணும் காய், கனிகளில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளை அடித்து சாகுபடி செய்யப்படுகிறது. அதனால் பளபளப்பாக தெரியும் ஆனால் அதன் மூலம்தான் மக்களுக்கு பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

நஞ்சில்லா காய்கனிகள் கிடைக்க வேண்டும் என்றால் நம் வீட்டில் நாமே காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டால் மட்டுமே சாத்தியம். இயற்கை எருவில் உற்பத்தி செய்யும் காய்கறி மனிதனுக்கு நன்மையை மட்டுமே தருகிறது. அதிலும் நம் பாரம்பரிய காய்கனிகளே சிறப்பானது. வீடுகளின் அருகே இடவசதி இல்லை, வாடகை வீட்டில் வசிக்கிறோம் என்று கவலைப்பட வேண்டாம்.  மிகக்குறைந்த செலவில் மாடித்தோட்டம் அமைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்பெறமுடியும்.

மாடித் தோட்டம் அமைத்து தினசரி தண்ணீர் தெளித்து பராமரிப்பு செய்தால் மனஅழுத்தம் குறையும், உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பானது மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பது. பெண்கள் தொலைக்காட்சி நெடுந்தொடர்களிலிருந்து விடுபட மாடித்தோட்டம் உதவி புரிகிறது என்றார். 

உதவி பேராசிரியர்கள் முனைவர் ஏ.அனுராதா (மண்ணியல் துறை), முனைவர் ராஜா ரமேஷ் (பூச்சியியல் துறை), பயிற்சி உதவியாளர் முனைவர் ஏ.ராஜேஷ், பண்ணை மேலாளர் துரை. நக்கீரன், திட்ட உதவியாளர் டி.ரேகா, மாடித்தோட்டம் வைத்துள்ள க.முகமது ரபீக் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 60 பெண்கள் உட்பட 110 பேர்கள் கலந்து கொண்டனர். 16 வகையான நாட்டு காய்கறி விதைகளை சமூக ஆர்வலர் வானவன் இலவசமாக அனுப்பி வைத்ததை பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

பாரம்பரிய நெல் சேகரிப்பாளரான பசுமை எட்வின் பாரம்பரிய நெல் ரகங்களை பயிற்சிக்கு வந்தவர்களுக்கு காட்சிக்கு வைத்து பின்பு நெல் ரகங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினார். முன்னதாக கிரீன் நீடா நகர அமைப்பாளர் ஜானகிராமன் வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் இராம. கந்தசாமி நன்றி கூறினார்.


இது குறித்து கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறும் போது... நீடாமங்கலம் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று இந்த அமைப்பை இளைஞர்கள் தொடங்கினோர் தெருக்கள், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்வதைப் பார்த்து வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வமுள்ள அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் எங்களுடன் இணைந்து கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறோம். எங்களின் இந்த செயலைப் பார்த்து அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளும் மரங்களின் ஆர்வலர்களும் கரம்கோர்த்துள்ளனர்.

பள்ளிகள், கல்லூரிகள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க போட்டிகளை ஏற்படுத்தி இருக்கிறோம். அதன் அடுத்தகட்டமாகத்தான் நஞ்சில்லா உணவு என்ற நிலைப்பாடு வந்தது. நமக்கு நாமே காய்கனிகளை உற்பத்தி செய்வதே சிறந்தது என்று தெரிந்தது. வீடுகளுக்கு அருகில் காலி இடம் இல்லை என்ற கவலையில் உள்ளவர்களையும் ஒருங்கிணைக்கதான் மாடித்தோட்டம் என்ற விழிப்புணர்வு பயிற்சி முகாம். இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரே நாளில் 80 பேர் பதிவு செய்தனர் அதில் அதிகமானோர் பெண்கள். அரசு அதிகாரிகளும் அடக்கம். பயிற்சிக்கு வந்தவர்கள் பயனுள்ளதாக இருந்தது என்றார்கள். அனைவருக்கும் 16 வகை நாட்டுக்காய்கறி விதைகளை கொடுத்திருக்கிறோம். அவர்கள் இனி விதைகளை மற்றவர்களுக்கு கொடுப்பார்கள் என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்