ADVERTISEMENT

குவைத்திற்கு வேலைக்கு சென்றவர் சுட்டுக்கொலை; உடலை இந்தியா கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை

11:24 AM Sep 13, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று நான்கு நாட்களிலேயே சுட்டுக் கொல்லப்பட்டவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முத்துக்குமரன் தனது குடும்ப சூழல் காரணமாக கடந்த 3 ஆம் தேதி குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். வேலைக்கு சேர்ந்த நாளே வேலை கடினமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் வேலைக்கு சென்ற நான்கு நாட்களிலேயே அதாவது 7ஆம் தேதி முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் 9ஆம் தேதி முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இது குறித்து விசாரித்ததில் முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள முத்துக்குமரனுக்கு யாரிடமும் எந்தவித முன் விரோதமும் இல்லாத நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பலரையும் கவலைப்பட செய்துள்ளது. இந்த சூழலில் முத்துக்குமரனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், முத்துக்குமரனை இழந்து வாடும் குடும்பத்திற்கு அந்த நாட்டிடமிருந்து உரிய இழப்பீடுகளை பெற்றுத் தர வேண்டும் என்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

குடும்ப வறுமையும், சொந்த நாட்டில் போதிய வேலை இன்மையும் இப்படி கடல்கடந்து, உறவுகளை பிரிந்து, வேலை தேடி செல்பவர்கள் இறந்து பிணமாகக்கூட வர போராடும் துயர நிலையே தொடர்கதையாகி விட்டது. இனி ஆட்சியாளர்கள் கருணை காட்டினால் மட்டுமே அந்த குடும்பம் மீண்டுவரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT