
மழைக்காலம் வந்துவிட்டாலே கிராமப்புற ஏழைகளின் நிலைமையும் கவலைக்கிடமாகிவிடும் என்பதற்கு திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகில் உள்ள, சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள தொகுப்பு வீடுகளே சாட்சி. தொகுப்பு வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில், 1995 ஆம் ஆண்டு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில், ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 40 தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. அந்தத் தொகுப்பு வீடுகள் ஒவ்வொன்றிலும் கணவன், மனைவி, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என பத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு மழைக் காலங்களிலும் வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்துவிழுவதே வாடிக்கையாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால், அங்குள்ள காலனி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், ராமையன் என்பவருக்கும், அவரது மகன் ராகுலுக்கும் படுகாயம் ஏற்பட்டு மன்னார்குடி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
"தொகுப்பு வீடுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில், தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு பழுது நீக்கம் செய்துதரவேண்டும். ஆனால், 25 வருடங்களாக இதுவரையிலும் பழுது நீக்கம் செய்து தரப்படவில்லை. 40 வீடுகளும் எப்போது இடிந்து விழும் என்கிற அவல நிலையில் தான் வாழ்ந்துவருகிறோம். இரவு நேரங்களில் இடிந்தால் ஒவ்வொரு வீட்டிலும் பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே, தமிழக அரசு உடனடியாகப் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து, புதிய வீடுகள் கட்டித்தரவேண்டும்," என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.