Thiruvarur dt Peralam temple near Lorry incident

திருவாரூர் மாவட்டம் பேரளம் - புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கரூரில் இருந்து கருங்கல் ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த லாரி திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கோவில் திருமாளம் என்ற பகுதியில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தது.

அப்போது லாரி வளைவில் வேகமாகத் திரும்பியுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அச்சமயத்தில், சாலையோரம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வரகூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (வயது 35), அவரது இரண்டு குழந்தைகளான நிரோஷன் (வயது 7), வியாஸினி (வயது 4) உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் விக்னேஷை போலீசார் வலைவீசித் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. லாரி மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் திருவாரூரில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.