Skip to main content

தொடங்கிய குடிநீர் பஞ்சம்... திண்டாடும் மக்கள்... அடக்கும் கரோனா!

Published on 17/05/2020 | Edited on 18/05/2020

 

 Thiruvannamalai Water shortage issue

 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் பற்றாக்குறை தொடங்கியுள்ளது. கோடைக்காலம் வந்தாலே குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே குடிநீர் பற்றாக்குறை தொடங்கியது. ஆனால் கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பொதுமக்கள் எதற்காகவும் வெளியே வரக்கூடாது என அடக்கியதால், சாப்பாட்டுக்கே பிரச்சனை என்னும்போது தண்ணீர் தேவை பெரியதாகத் தெரியவில்லை.
 


தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் வெளியே வரத்துவங்கியுள்ளனர். இந்நிலையில் குடிநீர் பிரச்சனை வெடிக்கத் துவங்கியுள்ளது. வாரத்தில் 2 நாள் மட்டுமே குடிக்கத் தண்ணீர் வருகிறது என்கிற குற்றச்சாட்டு கிராமங்களில் பரவலாக எதிரொலிக்கிறது.

கடந்த காலத்தில் கோடை வருவதற்கு முன்பே சிறப்பு ஏற்பாடுகள் மூலமாக, உள்ளாட்சி துறைக்கு நிதிகள் ஒதுக்கி, குடிநீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுப்பார்கள். இந்த ஆண்டு அப்படி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு கரோனா முடக்கியது.

தற்போது ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு அதிகாரிகள் பணியாற்றி வரும் நிலையிலும் மக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீர் வழங்குவதில் இருந்து விலகுகிறது அரசு. மற்ற மாவட்டங்களை விட திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக மிக அதிகமாக உள்ளது. இதுபற்றி அறிந்த திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 

 


அதில், இந்த வருடமும் வடகிழக்கு பருவமழை சரியாகப் பெய்யாத காரணத்தால் இந்த மாவட்டம் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த மாவட்டம் முழுக்க, முழுக்க விவசாயத்தை நம்பிய மாவட்டம். குடிநீர் பஞ்சம் இருப்பதால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்களால் வெளியே வந்து தங்களது தேவைக்காகப் போராடவும், குரல் கொடுக்கவும் முடியாத நிலையில் உள்ளனர். அதனால் இதனைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு சிறப்பு நிதிகளை ஒதுக்கி, குடிநீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.