/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1347.jpg)
திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அம்மணி அம்மாள். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்ஒரு பெண் சித்தர். அண்ணாமலையார் கோயிலின் வடக்கு கோபுரம் கட்டப்படாமல் இருந்ததை தனது முயற்சியால் கட்டி முடித்தவர் அம்மணி அம்மாள். கோபுரம் கட்டும்போது அம்மணியம்மாள்மற்றும் பணியாளர்கள்கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்கள் தங்குவதற்காக கோபுரத்தின் எதிரே 108 தூண்கள் கொண்ட மண்டபம் அமைக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடிக்கப்பட்டபின் அந்த மண்டபத்திலேயே அம்மணி அம்மாள் வாழ்ந்தவர், பின்னர் ஈசான்யம் பகுதியில் ஜீவா சமாதி அடைந்துவிட்டதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர். அந்த மண்டபம் மற்றும் அதன் முன்பகுதியினை அவரது பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.
அம்மணி அம்பாள் மடம், திருவண்ணாமலை நகரம், இரண்டாவது பிளாக் சர்வே எண் 1377ல் உள்ளது. மண்டபம் பகுதி போக மீதியிருந்த காலியிடத்தில் பூச்செடிகள் வளர்த்து கோவிலுக்கு பல ஆண்டுகளாக வழங்கி வந்தனர். அந்த இடம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிக்கப்பட்டது.இது 1975களிலேயே பிரச்சனையானது. அந்த பிரச்சனை தீராமல் இருந்தது. இரண்டாயிரத்துக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு பெரியதானதைத்தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சிவபாபு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இந்த மடம் எங்களுக்கே சொந்தம் என்ற அம்மணி அம்மாள் உறவினர்கள் மற்றும்ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் தங்களுக்கே இந்த இடம் உரிமையானது என்கிற ஆதாரங்களை தராததால் உயர்நீதிமன்றம், மடத்தினை இடம் மற்றும் பராமரிக்கும் அனைத்து உரிமைகளை அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்துக்கு 2015ல் வழங்கியது.
அந்த உத்தரவு வரும்போது மண்டபம் போக மீதியிருந்த 3800 சதுர அடியில் பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கர், இரண்டு அடுக்கு மாடி வீடு, அலுவலகம், குடோன் போன்றவற்றை அமைத்திருந்தார். இதனால் அந்த இடத்திலிருந்து காலி செய்யுமாறு சங்கர் மனைவி தீபாவுக்கு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. கோவில் நிர்வாகத்தின் நோட்டீசை எதிர்த்து மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் சங்கர். அறநிலையத்துறை நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வந்தது. 2021 நவம்பர் 12 ஆம் தேதி முதல் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சங்கர் தரப்பு ஆஜராகாததால் 04.05.22 ஆம் தேதி நடைபெற்ற இறுதி விசாரணையிலும் ஆஜராகவில்லை. அறநிலையத்துறையின் நோட்டீசை எதிர்த்து திருவண்ணாமலை உரிமையியல் நீதிமன்றத்தில் சங்கர் தாக்கல் செய்த மனுவில்ஆதாரங்கள் எதுவுமில்லை எனத்தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, மார்ச் 15 ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். மார்ச் 18 ஆம் தேதி காலை இடிக்கத்துவங்கினர். 3800 சதுர அடி இடத்தில் வீடு கட்டியவர் அதில் தனது வழக்கறிஞர் அலுவலகத்தையும், கார் ஷெட் வைத்திருந்தார்.அவை அனைத்தும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. அதன்பின் 108 தூண்கள் வைத்து கட்டப்பட்ட அம்மணியம்மாள்மடத்தையும் இடிக்கத்துவங்கினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3720.jpg)
இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஆதரவாக இருந்த ஆன்மீக அமைப்புகள் அம்மணியம்மாள்மடத்தை இடிக்கத்தொடங்கியதும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இடிப்பது நிறுத்தப்பட்டது. கோவில் புராதன சின்னங்களை இடிக்க வேண்டும் என்றால் அதற்கு பல விதிமுறைகள் உள்ளன. பல துறைகளில் இருந்து அதற்கு ஒப்புதல் பெற வேண்டும். அப்படியிருக்க சட்ட விதிகளுக்கு மாறாக பழமையாக 108 தூண்கள் கொண்ட மண்டபம் இடிக்கப்பட்டது. எந்த அனுமதியும் வாங்காமல் இடிக்கப்பட்டது குறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “என் விருப்பம் நான் இடிக்கச் சொல்வன்.என்னை யார் கேள்வி கேட்கறது. இடிக்க கோர்ட் உத்தரவு இருக்கு” என கோபமாக சொல்லியடி கோவிலுக்குள் சென்று புகுந்து கொண்டார். நீதிமன்ற உத்தரவு இருக்கிறது என்றவர்அதைக்காட்ட மறுத்துவிட்டார். பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு அதிகாரியோ, முக்கியமான இடத்திலிருந்து ஃபோன் கால் அதனால் இடிக்க வேண்டியதாகப் போச்சி என்றுள்ளார்.
மறுநாள் மாலை அம்மணியம்மாள்மடத்தை எப்படி இடிக்கலாம்.நான் அம்மணியம்மாள்அறக்கட்டளை டிரஸ்ட்டி எனச் சொல்லிக்கொண்டு பிரச்சனை செய்தார் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த பாஜக நிர்வாகியான சங்கர். இடித்து மண் கூடாக்கப்பட்ட இடத்தில் என் வீட்டை இடிச்சீங்கன்னு நான் இங்க வரல, அம்மணியம்மாள்மடத்தை எப்படி இடிக்கலாம் என கோபமாக கேள்வி எழுப்பி சாபம் விட்டவர், காவல்துறை அதிகாரிகளை ஒருமையில் பேசினார். இதற்கெல்லாம் காரணம் அமைச்சர் எ.வ.வேலுதான் என குற்றம்சாட்டினார். சங்கரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. கோவில் இடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக கோவில் இணை ஆணையர் தந்த புகாரின் போரில் இந்து முன்னணியை சேர்ந்த ஏழுமலை, காளியப்பன், கார்த்திகேயன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாஜக மாநில நிர்வாகி வழக்கறிஞர் சங்கர், வெங்கடேசன், அஜித் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.
ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு விஷ்வ இந்து பரிஷத் உட்பட ஆன்மீக இயக்கங்கள் ஆதரவு தெரிவித்தன. சில அமைப்புகள் போஸ்டர் ஒட்டி நன்றியை தெரிவித்தன. இந்து முன்னணி மட்டும் மடத்தை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு மண்டல பொறுப்பாளர் மகேஷ் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தன. இப்போது அனைத்து இந்து அமைப்புகளும் மண்டபம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசியலாகிப்போன விவகாரம்...
திருவண்ணாமலை நகரத்தின் அரசியல் சாராத பொது இயக்கங்களின் முக்கிய பிரமுகர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை கோவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அங்கு பக்தர்களுக்கான வசதிகளை செய்து தரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவர்களிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பினர்.
இந்நிலையில் அம்மணி அம்மாள் மடம் தொடர்பாக இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வடக்கு கோபுரத்தை கட்டியவர் அம்மனி அம்பாள். சித்தராக வாழ்ந்து மறைந்தார். அவரது பெயரிலான மடம் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது. அவர்கள் ஒரு டிரஸ்ட்டை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த மடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானதல்ல. இந்த மடத்தின் வாட்ச்மேனாக இருந்தவர் மடத்தை கைப்பற்றி ஆண்டு அனுபவித்து வந்தார். மடம் தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடினார். இந்து முன்னணி கௌரவ தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், மடத்துக்கு டிரஸ்ட்டுக்காக 30 ஆண்டுகள் போராடி உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மீட்டெடுத்தார். மடத்தின் டிரஸ்ட் உறுப்பினராக மாநில இந்து முன்னணி அமைப்பும் சேர்ந்து மடத்தை பாதுகாத்து வந்தது. திருவண்ணாமலை நகர மன்றத்தலைவராக இருந்த ஸ்ரீதர் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றார்.
அமைச்சர் எ.வ.வேலு இதே இடத்தை ஆக்கிரமிக்க முயன்றபோது கோபால்ஜீ, முதலமைச்சராகவுள்ள ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆக்கிரமிக்காமல் தடுத்தார். இதனை ஆக்கிரமிக்க முயல்கிறவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். மடத்தை பார்த்துக் கொண்டு வந்த சங்கர் சுயநலவாதியாக மாறி ட்ரஸ்ட் நிர்வாகிகளை ஏமாற்றி அங்கே வீடு கட்டிக்கொண்டார். இதனால் அவரை மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கினோம். ஆக்கிரமிப்பை அகற்றியதை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். 500 ஆண்டுகள் பழமையான மண்டபத்தின் வரலாறு தெரியாமல் இடித்தது தவறு. எதுவும் தெரியாமல் அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிடுகிறார். அம்மணியம்மன் பக்தையான முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் இதில் தலையிட வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
சாதாரண ஆக்கிரமிப்பு விவகாரம் இப்போது அரசியல் விவகாரமாக மாறி திருவண்ணாமலை முதல் டெல்லி வரை தகிக்கத்துவங்கியுள்ளது. அந்த இடத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை விலைப்போகும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் மார்க்கெட் அறிந்தவர்கள். இந்த இடத்தினை சொந்தமாக்கிக் கொள்ள பல முக்கிய பிரமுகர்கள் இதில் பல ஆண்டுகளாகவே கவனம் செலுத்தினார்கள்.இந்த இடத்தின் விவகாரம் சுமார் 40 ஆண்டுகளாக நடந்து வருகிறது. திமுக பிரமுகர் ஒருவரிடமிருந்து பாஜக சங்கர் கைகளுக்கு சென்ற இந்த இடம் இப்போது மீட்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான அந்த மண்டபம் ஏன் இடித்தனர்.இடித்துவிட்டு அந்த இடத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது.
கார் பார்க்கிங் என்று சிலரும், இல்லை சிலர் குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் கட்டப் போகிறார்கள் என்றும் இல்லை ஆளும்கட்சியினர் அந்த இடத்தை தங்கள் வசப்படுத்தப் போகிறார்கள் என்று யூகித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த இடம் மிக முக்கிய பெண்மணி ஒருவருக்காக குறி வைக்கப்படுகிறது.அங்கு யூகிக்க முடியாத ஒன்றை செய்யப் போகிறார்கள் என்கிறார்கள். அது உண்மையா அல்லது யூகமா? அங்கே என்ன செய்யப் போகிறார்கள்? இவ்வளவு பிரச்சனைக்கு பின்பு அவர்களின் எண்ணம் நிறைவேறுமா? என்பதற்கு பதில்? காலமே பதில் சொல்லும்எனவும் தெரிவிக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)