ADVERTISEMENT

திருவண்ணாமலையில் 144 உத்தரவை மீறியதாக தினமும் 650 வழக்குகள்!

11:14 PM Apr 29, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா இல்லாத மாவட்டமாக்க, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கடுமையாக முயற்சித்து வருகிறது. வெளிமாநிலம் சென்று வந்தவர்கள், வெளிமாநிலம் சென்று வந்தவர்களின் குடும்பத்தார் மட்டுமே கரோனா நோயால் பாதிக்கப்பட்டு, 10 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அது பின்னர் சுகாதார பணியாளர்களை தாக்கிய வகையில் 15 நோயாளிகளாக மாறியது. இதில் 11 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் இன்னும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது சமூக தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி, இரண்டாவது ஈகிள் டீம் உருவாக்கம் செய்து மாவட்டத்தை வலம் வரசெய்து அநாவசியமாக வெளியே சுற்றுபவர்களை மடக்கி பிடித்து கைது செய்யவைத்துள்ளார். அதேபோல் நகரம், பேரூராட்சி பகுதிகளில் காவலர்கள் மூலமாக தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல் பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் போட வருபவர்களின் வாகன எண்ணை பதிவு செய்து அதன் வழியாகவும் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு அநாவசியமாக வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தினமும் 600க்கும் குறையாத வழக்குகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஏப்ரல் 29ந்தேதி மட்டும், 675 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 681 பேர் கைது செய்யப்பட்டு 663 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 667 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட இந்த 36 நாட்களில் மொத்தம் 22,379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23,202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 22,335 இருசக்கர வாகனங்கள், 52 ஆட்டோக்கள், 145 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 22,532 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதாவது தினசரி 650க்கும் குறையாத வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், பைக்கில் ட்ரிபிள்ஸ் போவது, வெட்டியாக சும்மாவே ஊரை சுற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை இருந்தபடிதான் இருக்கின்றன. இன்னமும் கரோனா குறித்த பயம் மக்களிடம் இல்லாமல் உள்ளது என வேதனைப்படுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT