Skip to main content

திருவண்ணாமலை மண்சரிவு; ‘எப்போ?’ - நடிகர் ரஜினி அதிர்ச்சி!

Published on 09/12/2024 | Edited on 09/12/2024
 Thiruvannamalai Landslide When Actor Rajini shocked

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே கனமழை காரணமாகத் திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி நகரில் கடந்த 1ஆம் தேதி (01.12.2024) இரவு மண் சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 இரண்டு குழந்தைகள்,  பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 குழந்தைகள் என மொத்த 5 குழந்தைகள் உள்ளிட்ட 7 பேர் இந்த சம்பவத்தில் சிக்கினர். இதனையடுத்து 7 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (09.12.2024) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், ‘திருவண்ணாமலையில் மண்சரிவில் 7 பேர் இறந்துள்ளனர்’ இது குறித்து கேள்வி கேட்டார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம், “எப்போ?” எனக் கேட்டார். அதற்குச் செய்தியாளர்கள் விளக்கம் அளித்தனர். அதன்பின்னர், “ஓ மை காட் சாரி (O my god sorry) எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்