Thiruvannamalai Landslide  Chief Minister Relief Announcement

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று முன்தினம் (01.12.2024) இரவு மண் சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. சுமார் 20 மணி நேரமாக உள்ளே சிக்கியுள்ளவர்கள் நிலை என்ன எனத் தெரியாமல் இருந்த நிலையில் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஒன்று சிக்கியது. அந்த உடல் கௌதமன் (வயது 9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த மண் சரிவில் சிக்கிய 7 பேரில் 5 பேரின் உடலும், இருவரின் உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. எனவே இந்த 2 பேரின் உடல்களை மீட்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மண் சரிவில் இறந்தவர்களின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களை முழுமையாக மீட்கவில்லை எனக் குற்றம் சாட்டினர். அதோடு மீட்புப் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

Advertisment

இந்நிலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் போனது துரதிருஷ்டவசமானது” என முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.