திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட வைப்பூர் கிராமத்தில் உள்ள கரடிமலை அடிவாரத்தில் பூமிக்கடியில் இரண்டு 500 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க் மூலமாக கள்ளச்சாராய ஊறல் போட்டிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து டெல்டா டீம் போலீஸார் ரெய்டு செய்து, அவைகளை தோண்டி எடுத்து அழித்தனர்.
அதேபோல், வேட்டவலம் இருளர் காலணி, திருவண்ணாமலை நகரில் கல்நகர், போளுர் அருகே கரிக்காத்தூர், தனியாறு, கந்தபாளையம், திருமலை கிராம பகுதி, கந்தபாளையம், ஜம்னாமத்தூர் மேல்செப்பி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்தவர்கள் 11 பேரை கைது செய்தனர். சாராய கேன்கள், இருசக்கர வாகனங்கள் 4 போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள ஏரிதண்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரவி, கீழ்பாச்சார் கிராமத்தை சேர்ந்த சாந்து நாய்க்கர் மகன் முருகன், திருவண்ணாமலை நகரம் பேகோபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி பத்மா ஆகிய மூவர் தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மூவரை கைது செய்தனர். அவர்கள் மீது ஏற்கனவே பல சாராய விற்பனை வழக்குகள் உள்ளன.
அதனால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோப்பு அனுப்பினார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி. அதனை ஏற்று அவர் அவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். கடந்த 4 மாதத்தில் மட்டும் 32 பேர் குண்டர் சட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் சாராயம் காய்ச்சியதுமற்றும் விற்பனை செய்ததுஎன மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.