Advertisment

“தி.மு.க. ஆட்சியா? பா.ம.க. ஆட்சியா?” - ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த ஆளும்கட்சி பிரமுகர் 

Thiruvannamalai government school issue

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கப்பட்டு கடந்த 25 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை திருவாரூரில் இருந்து தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட அமைச்சர்களும், தொகுதிகளில் எம்.எல்.ஏக்களும், ஒன்றியக்குழு சேர்மன்கள் தங்கள் பகுதிக்குஉட்பட்ட ஏதாவது ஒரு கிராமத்தில் தொடங்கி வைத்தனர்.

Advertisment

இது சிறந்த திட்டம் என்பதால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளில் கலந்துகொண்டனர். அதன்படி கடந்த 21 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் இனாம்காரியந்தல் ஊராட்சி வெங்காயவேலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஒத்திகைக்காக உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பா.ம.க.வைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சித் துணைத் தலைவர் கங்கா குருமூர்த்தி மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு காலை உணவுகளைவழங்கி உள்ளனர். இந்நிகழ்ச்சி இளநிலை ஆசிரியர் ஜோதிலட்சுமி ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மாலை திமுக கிளைச் செயலாளர் பன்னீர், இளநிலை ஆசிரியை ஜோதிலட்சுமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், ‘பா.ம.க.வை அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பீர்களா, சி.இ.ஓ.வை பார்த்து மந்திரியிடம் போட்டோவுடன் அனுப்பி உன்னை பார்த்து விடுவேன்.நாளை பள்ளி திறந்தால் பசங்களை வைத்து பிரச்சனை செய்வேன்.தி.மு.க. ஆட்சி நடக்கிறதா? பா.ம.க. ஆட்சி நடக்கிறதா? பள்ளியில் கட்சி நடத்துகிறீர்களா? பள்ளியில் ஒரு நாள் கூட வேலை பார்க்க முடியாது’ எனப் பேசியுள்ளார்.

அதேசமயம் ஆசிரியை ஜோதிலட்சுமி, “சம்பவம் நடந்த அன்று தலைமை ஆசிரியர் இல்லாததால் நான் வெறும் ஏற்பாடுகளை மட்டுமே மேற்கொண்டேன். ஆனால், எனக்கு தொடர்பு கொண்டு ‘பள்ளியில் ஒரு நாள் கூட வேலை பார்க்க முடியாது’ என மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால், எனக்கு வேலைக்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது” என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள முன்மாதிரியான காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்தி வரும் நிலையில், தற்பொழுது இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற தவறுகள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் நிர்வாகிகள் மீது கட்சியின் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அரசு ஊழியர்களும் தங்களது சாதி, மத, அரசியல் நிலைப்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசுப் பணியைச் செய்யவேண்டும். தங்கள் பணியைச் சரியாக செய்யும்போது குறுக்கீடுகள் வரும்போது அதுகுறித்து தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அங்கு நடவடிக்கை இல்லாத பட்சத்தில் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம். ஆனால், பல துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் சிலர் தங்களது புகார்களைத்தங்களது மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் நேரடியாக சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இது அரசுப் பணியாளர் விதிகளை மீறிய செயலாகும் என்ற கருத்துகளும் சொல்லப்படுகிறது.

thiruvannamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe