Skip to main content

அமைச்சர் அலுவலக பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல்; பரபரக்கும் திருவண்ணாமலை திமுக

 

Thiruvannamalai DMK Member hospitalized

 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளராக இருப்பவர் டி.வி.எம் நேரு. திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்டத்தின் திமுக அலுவலகத்தில் சம்பளம் பெறும் முக்கிய பணியாளராகவும் இருந்து வருகிறார். பொதுப்பணித்துறை அமைச்சரும், மா.செவுமான எ.வ.வேலுவுக்கு கட்சி தொடர்பான சில தகவல்கள் தருவது, பத்திரிக்கை செய்திகளை கட்சி அலுவலகத்தில் இருந்து தொகுத்து தருவது, திமுக நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வது, எம்.எல்.ஏ அலுவலம் மேற்பார்வை, திமுக சார்பில் நடத்தப்படும் இலவச தையலகம் உட்பட சிலவற்றின் மேற்பார்வை பணி, நகர திமுக நிர்வாகிகளை வேலை வாங்கும் பணிகளை செய்துவந்தார்.

 

இந்நிலையில் கடந்த மே 26ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் பழைய பைபாஸ் சாலை வழியாக என்.எஸ்.சித்ரமால் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த ஒருவண்டி இவரது வண்டி மீது மோதி கீழே தள்ளியுள்ளது. அந்த வண்டியிலிருந்து இறங்கிய முகமூடி அணிந்த இருவர் தங்களிடமிருந்த இரும்பு ராடால் டி.வி.எம். நேரு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலில் தலையில் அடித்தவர்கள், பின்னர் கீழே விழுந்தவரை சரமாரியாக அடித்துள்ளனர். அவரின் அலறல் கேட்டு ஒருவர் அந்த சாலையில் வந்ததும் அடித்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

 

ரத்தவெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 10 தையல் போடப்பட்டுள்ளது. உடலெங்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முதலுதவி சிகிச்சை தந்துள்ளனர். அதன் பின்னர் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

 

இந்த தகவல் அமைச்சர் வேலு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ச்சியாகியுள்ளார். கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உடனே கண்டு பிடிக்கவேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயனுக்கு அமைச்சரே நேரடியாக பேசி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

ஏன் கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள்? என்ன காரணம் என்பது இதுவரை வெளிவரவில்லை. இந்த விவகாரம் வெளியே தெரியக்கூடாது எனச்சொல்லி ரகசியமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்வதோடு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். குற்றவாளிகள் குறித்து சில துப்புகள் கிடைத்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

 

இது தனிப்பட்ட பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? சொத்து பிரச்சனையா? உட்கட்சி பிரச்சனையா? அரசியல் பகையா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

அமைச்சர் ஊருக்கு வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மாவட்ட திமுக அலுவலகத்தில் பணியாற்றுபவரும், திமுக நிர்வாகியுமான டி.வி.எம். நேரு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !