Thiruvannamalai DMK ADMK issue

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 21 கவுன்சிலர்கள். திமுக கவுன்சிலர்கள் 9 பேர், அதிமுக, பாமக கவுன்சிலர்கள் 10 பேர், சுயேட்சைகள் 2 பேர் என உள்ளனர். இதில் சுயேட்சைகள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் ஒருவர் திமுகவுக்கு ஆதரவு அளிக்க கலசப்பாக்கம் ஒன்றிய சேர்மனாக திமுகவை சேர்ந்த அன்பரசி வெற்றி பெற்று பதவியில் உள்ளார்.

வைஸ் சேர்மன் பதவியைப் பிடிக்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த முன்னாள்அமைச்சரும், சிட்டிங் மாவட்டச் செயலாளருமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கடுமையாக முயற்சி செய்தும் கலசப்பாக்கம் ஒன்றிய துணை சேர்மனாக திமுகவை சேர்ந்த குட்டி என்கிற பாலசுப்பிரமணி என்பவர் வெற்றி பெற்றார்.

திமுகவின் இந்த வெற்றியால் கலசப்பாக்கம் என்னுடைய கோட்டை என மார்தட்டிக்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரான அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு அவமானமானது. அந்தளவுக்கு சேர்மன், துணை சேர்மன் பதவிகளில் திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்தவர்கள், தற்போது கோஷ்டி பூசலால் முட்டிக்கொண்டு உள்ளார்கள். ஒரு திருமண பத்திரிகை விவகாரத்தில் அது வெளிப்படையாக வெடித்துள்ளது.

Advertisment

கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்வாரணி கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரதிநிதி ஆறுமுகம் மகளுக்கு திருமணம். இதற்காக திருமண பத்திரிகையில் ஒன்றியத்தில் உள்ள திமுக கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளின்பெயர்கள் அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த வில்வாரணி ஒன்றியக் குழு கவுன்சிலரும், திமுக பிரமுகருமான சி.பிச்சாண்டி பெயர் போடவில்லை.

அதற்கு காரணம் உட்கட்சிப் பூசல் தான். கலசப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளராக சுப்பிரமணி உள்ளார். ஒன்றிய துணைச் செயலாளராக இருப்பவர் குப்பன். இவரது அம்மா பட்டம்மாள், ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர்கள் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஆதரவாளர்கள். அக்ரியின் முன்னாள்ஆதரவாளரும், தற்போது எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் வலதுகரமாகவும் உள்ள பொய்யாமொழி, ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலில் நின்றபோது, குப்பன் உட்பட சில திமுக நிர்வாகிகள் பொய்யாமொழிக்காக வேலை செய்துள்ளனர். அதனையும் மீறி திமுக வேட்பாளர் பிச்சாண்டி வெற்றி பெற்றார்.

திமுக வைஸ் சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தி அவரை பதிவியில் இருந்து நீக்கிவிட்டு அதிமுக கவுன்சிலர்களில் ஒருவரை அந்த பதவியில் அமர வைக்க அக்ரி.கிருஷ்ணமூர்த்தி காய் நகர்த்துகிறார். இதற்கு ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, குப்பன் ஆகியோர் ஒத்துழைக்கிறார்கள். தற்போது வைஸ் சேர்மனாக உள்ள குட்டிக்கு ஆதரவாக களமிறங்கி அவரை அந்தப் பதவியில் உட்கார வைக்க முயற்சி செய்தவர்களில் முக்கியமானவர்கள் வில்வாரணி மற்றும்கவுன்சிலர் பிச்சாண்டி. அதனைக் கருத்தில் கொண்டு அவரை அவமானப்படுத்தி, கட்சியில் ஓரம் கட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே அவரது ஊரில் நடக்கும் திருமணத்தில் அவர் பெயரை போடவிடாமல் தடுத்துள்ளார் என்கிறார்கள். இது கலசப்பாக்கம் திமுகவில் பரபரப்பாகியுள்ளது.

Advertisment

Ad

கலசப்பாக்கம் தொகுதி திமுகவில் கோஷ்டி சண்டைகள், அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல், அவருக்கு அடிமையான திமுக பிரமுகர்களால் அந்தத் தொகுதியில் திமுக தொய்வாக இருந்தது. இந்நிலையில் அந்த தொகுதியைக் குறிவைத்து எ.வே.கம்பன் களமிறங்கி திமுக பிரமுகர்களுக்கு ஆதரவாக நின்று பிரச்சனைகளை தீர்த்தார். உள்ளாட்சித் தேர்தலில் சேர்மன், வைஸ் சேர்மன் பதவிகளில் திமுகவினரை அமர்த்தினார்.

இந்நிலையில், மீண்டும் அங்கு கோஷ்டி பூசல் உருவாகி, அதிமுகவுக்கு சாதகமாக நடந்துகொள்வது திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.