Skip to main content

தீபத்திருவிழா – மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம்;வெதும்பும் ஆன்மீக அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தீபத்திருவிழாவுக்கு அரசுத்துறை செய்ய வேண்டிய, செய்துள்ள பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் தலைமையில் ஒரு ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டமும், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் ஒரு ஆய்வு கூட்டம் என இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் நவம்பர் 30ந்தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், கார்த்திகை தீபத்திருவிழா தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்திலும் இப்படிப்பட்ட கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் சார்பாகவும், ஆன்மீக அமைப்புகள் சார்பாக சொல்லப்படும் எந்த கருத்துக்களையும் மாவட்ட நிர்வாகமோ, கோயில் நிர்வாகமோ கேட்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஆன்மீக அமைப்புகளிடம் உள்ளது.

 

thiruvannamalai deepam;Opinion meeting with the people

 

குறிப்பாக வெளியூர்களில் இருந்து கொடியேற்றம் அன்றே ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து விடுகிறார்கள். இவர்கள் வசதி வாய்ப்புள்ளவர்கள் ஹோட்டல்களிலும், ஓரளவு வசதியும், விவரம் அறிந்தவர்கள் அன்ன சத்திரங்கள், மாடவீதியில் உள்ள சாதிக்களுக்கான மடங்களில் தங்கிக்கொள்கிறார்கள். மற்றவர்கள் சாலையோரம் உள்ள கடை வாசல்களில் படுத்துக்கொள்கின்றனர். இவர்கள் கொசுக்கடியிலும், மழை வந்தால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் யார் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளும் வகையில் கோயில் எதிரே அல்லது கோயிலை சுற்றியுள்ள இடத்திலோ, கோயிலுக்கு சொந்தமான வேறு இடத்தில் ஒரு ஷெட் அமைத்து தந்துவிட்டால் ஏழை பக்தர்கள் தங்கிக்கொள்வார்கள் என்கிற கோரிக்கை பல ஆண்டுகளாக ஆன்மீக அமைப்புகள் வைத்து வருகின்றன. இதனை இதுவரை நடைமுறைப்படுத்த தயங்குகின்றன.

அதேபோல், தீபத்திற்கு 2 நாள் முன்பே நகர மக்கள் வெளியே செல்லவே, வரவே முடியாத அளவுக்கு குறிப்பாக கார், இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாத அளவுக்கு தெருக்களில் தடுப்பு போட்டு அடைத்துவிடுகிறது. எங்கு, எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்றாலும் நடந்தே செல்ல வேண்டும். நகரத்தை திறந்தவெளி சிறைப்போல் மாற்றி விடுகிறது காவல்துறை. இதனால் திருவண்ணாமலை நகர பக்தர்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனை சரிச்செய்யச்சொல்லி பலமுறை பொதுமக்கள் சார்பாக வலியுறுத்தியும் காவல்துறை அதனை கண்டுக்கொள்வதேயில்லை.

 

thiruvannamalai deepam;Opinion meeting with the people


அதேபோல் ஆட்டோ கட்டணத்தை குறைக்க ரேட் பிக்ஸ் செய்யும் காவல்துறையும், போக்குவரத்துதுறையும் அதனை கடைப்பிடிக்கிறார்களா என பார்ப்பதில்லை. அதேபோல் கடை வைப்பவர்களிடம் உள்ளுர் ரவுடிகளில் அந்தந்த ஏரியாக்களில் மிரட்டி மாமூல் வாங்குகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை இதுவரை கண்டுக்கொண்டதேயில்லை.

பரணி தீபம், மகாதீபம் காண ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் கோயிலுக்குள் நுழைவதற்கு பாஸ் இல்லாத பக்தர்களை கோயிலுக்குள் விடுவதேயில்லை. பேகோபுரம் வழியாக சாதாரண பக்தர்களை உள்ளே விடுகிறோம் என கணக்கு சொல்கிறார்களே தவிர சில நூறு பக்தர்களை அனுமதித்துவிட்டு ஆயிரத்துக்கும் அதிகமான சாதாரண பக்தர்களை அனுமதிக்கிறோம் என பொய் சொல்கிறார்கள், விஐபிக்களை பந்தாவாக அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைக்கும் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களையும், சாதாரண பக்தர்களை பாதுகாப்புக்கு நிற்பவர்களிடம் பல ஏச்சுக்கும், பேச்சுக்கும், மீறினால் மிரட்டுகிறது, இவைகள் பற்றி குறிப்பிட்டால் மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்வதில்லை என்பது கடந்த காலத்தில் பொதுமக்களின் குற்றச்சாட்டு.

 

thiruvannamalai deepam;Opinion meeting with the people

 

கார்த்திகை தீபத்தன்று மட்டும், மலை உச்சிக்கு ஏறிச்செல்லும் பக்தர்கள் சிவப்பாதம் எனப்படும் உச்சி பகுதியை தொட்டு வணங்கிவிட்டு வருவார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வந்த பக்தர்களின் நம்பிக்கை, பக்தி சார்ந்த விஷயம். மலையேறுவது பாதுகாப்பற்றது எனச்சொல்லி தற்போது 2500 பேர் மட்டும்மே அனுமதி அவர்களுக்கும் டோக்கன் தருவோம் எனச்சொல்லி முடக்கியுள்ளது. இதுதவறானது  எனச்சொல்லி பல ஆன்மீக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இப்படி தொடர்ச்சியாக பக்தர்கள், அமைப்புகள் தொடர்ச்சியாக வைக்கும் பல கோரிக்கைகளையே நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகம், எதற்காக இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதிகாரிகளுக்காக, ஆளும்கட்சியினருக்காக, பணக்காரர்களுக்காக நடத்தப்படும் விழாவாக தீபத்திருவிழா மாறிவருகிறது. அவர்களுக்காகதான் பல ஏற்பாடுகள் செய்கிறார்கள். மக்களுக்கான விழா எனச்சொல்வதுயெல்லாம் வெறும் கண் துடைப்புக்கானது என புலம்பும் ஆன்மீக அமைப்பினர். அவுங்க வைக்கற கண் துடைப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டு எப்போதும் போல் கோரிக்கை வைப்பதன் நோக்கம்மே, மக்களுக்கான அதிகாரிகள் யாராவது வந்து நாங்கள் சொல்வதை கொஞ்சமாவுது காதுக்கொடுத்து கேட்கமாட்டார்களா என்பதற்காகத்தான் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்