Skip to main content

ரவுடி ஃபங்க் பாபு படுகொலை... பழிக்குப் பழியா? போலீஸ் விசாரணை!

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Thiruvannamalai babu police investigation


திருவண்ணாமலை நகரம், பழைய பைபாஸ் சாலையில் டிசம்பர் 3ஆம் தேதி காலை 11.30 மணியளவில், சுகஸ்தலா மருத்துவமனை எதிரில் உள்ள கும்பகோணம் டீ கடையில், டீ குடிக்க வந்த ரியல் எஸ்டேட் அதிபரும், கொலைக் குற்றவாளியுமான ஃபங்க் பாபுவை, ஒரு இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தயாராகயிருந்த ஒரு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார்.


கழுத்தில் குறிவைத்து வெட்டப்பட்ட ஃபங்க் பாபு, சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். பாபுவை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தவர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட, திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், தனி டீம்கள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார்.


இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, வெட்டியவர் ஒருவர், அவர் 3 இளைஞர்களோடு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளார். அவர்களைப் பிடித்தால் மட்டுமே எதனால் இந்தக் கொலை நடைபெற்றது எனத் தெரியவரும் என்றார்கள்.


இந்தக் கொலை சரியாக ஸ்கெட்ச் போடப்பட்டு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் தன் நண்பருடன் பாபு டீ கடைக்கு வர, பின்னால் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த கொலைகாரர், எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் சென்று, கடை வாசலில் வைத்து, தனி ஒருவனாக வெட்டியுள்ளார், உயிர் போகவேண்டும் என்றே கழுத்தில் குறிவைத்து வெட்டியதாகத் தெரிகிறது. வெட்டியவரோ அவரது நண்பர்களோ யாரும் முகத்தில் எந்த மாஸ்க்கும் போடவில்லை எனக் கூறப்படுகிறது. பாபுவின் நண்பர் வெட்டியவரைப் பிடிக்க முயல, அவர் அங்கிருந்து தப்பி ஒரு இருசக்கர வாகனத்தில் தயாராகயிருந்த தன் நண்பர்கள் மூன்று பேருடன் தப்பியது அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.


கடந்த 2017 பிப்ரவரி 12ஆம் தேதி காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருமஞ்சனகோபுரம் அருகே அ.தி.மு.க பிரமுகரும், முன்னாள் அ.தி.மு.க ந.செவும், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்த கனகராஜை, அவரது நண்பர்களான ஃபங்க் பாபு, ராஜா, சரவணன் என 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். கொலை செய்துவிட்டு அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் சரணடைந்தார்கள்.


கனகராஜ், ஃபங்க் பாபு இருவரும் நீண்ட கால நண்பர்கள், பாபு தி.மு.க.வில் தொழிலாளர் அணியில் பதவியில் இருந்தார். இருவரும் வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் தொழில் ரீதியாக பார்ட்னராக இருந்தனர். ரியல் எஸ்டேட் தொழிலில் இருவருக்கும் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கனகராஜை, பாபுவும் அவரது நண்பர்களும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்தனர். அந்தக் கொலை வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் பாபுவுக்கு ஆதரவாக, வடமாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞரான முன்னாள் எம்.பி ஒருவர் ஆஜரானார்.

 

cnc

 

இந்தக் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பாபு, பல கட்டப் பஞ்சாயத்துகள், ரியல் எஸ்டேட் தகராறுகள், மிரட்டி இடம் வாங்குவது, அடிதடி என நகரை மிரட்டிக்கொண்டு இருந்தார். அதில் பாதிக்கப்பட்ட யாராவது கொலை செய்தார்களா அல்லது பாபுவால் கொலை செய்யப்பட்ட கனகராஜ் தரப்பைச் சார்ந்தவர்கள் கொலை செய்தார்களா என விசாரணை நடத்திவருகிறது காவல்துறை.
 

பட்டப் பகலில் ஒருவர், மக்கள் கண் முன்னால் கொலை செய்யப்பட்டது நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிசினஸ்மேன் டூ அரசியல்வாதி; கலைஞர் சொன்ன அந்த வார்த்தை...” - யார் இந்த அண்ணாதுரை?

Published on 08/04/2024 | Edited on 09/04/2024
Activities of Tiruvannamalai DMK candidate Annadurai

நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகத்தின் 39 தொகுதியிலும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஆன்மீக திருத்தலங்கள் நிறைந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சி.என். அண்ணாதுரை இரண்டாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுவின் இளைய மகன் மருத்துவரணி மாநில துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் கு.கருணாநிதிக்கு தலைமை சீட் வழங்கும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் சி.என். அண்ணாதுரை மீது தலைமை நம்பிக்கை வைத்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சி.என். அண்ணாதுரை அந்த தேர்தலில் வெற்றிப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஆனால், மத்தியில் ஆளும் அரசு எதிர்க்கட்சி பாஜகவாக இருப்பதால், அவரால் தொகுதி திட்டப்பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் எம்பியின் ஆதரவாளர்கள்.

51 வயதான சி.என். அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சி.என். அண்ணாதுரையின் தாத்தா சின்னசாமி பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்டவர். அவரைத் தொடர்ந்த சி.என். அண்ணாதுரையின் அப்பா நடராஜனும் திமுக கட்சியில் அப்போதே ஒன்றியச் செயலாளராக கழக பணியில்  ஈடுபட்டவர். இப்படி இரண்டு தலைமுறையாக பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்ட குடும்பம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மகனுக்கும்  பேரறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டியது. சி.என். அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கட்டுமானத் துறையில் நுழைந்த அண்ணாதுரை முழு நேர பிசினஸ்மேனாக மாறினார். இதனிடையே,  மூன்றாவது தலைமுறையாக திராவிட இயக்கத்தில் இருந்த அண்ணாதுரை கிளைச் செயலாளர்,  துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என படிப்படியாக திமுக கட்சியில் வளர்ந்தவர்.  

தொடர்ந்து, பாரம்பரியமாக திமுக கட்சியில் தீவிரமாக கழகப் பணிகளை செய்து வந்த சி.என். அண்ணாதுரையை திமுக அமைச்சர் எ.வ.வேலு இளம் வயதிலேயே அடையாளம் கண்டார். அதனைத் தொடர்ந்து, எ.வ.வேலுவின் அரவணைப்பில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த சி.என். அண்ணாதுரைக்கு திமுக கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக வாய்ப்பு வழங்கியது. ஆனால், அந்த முறை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். முன்னதாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் சி.என். அண்ணாதுரைக்கு முதல் முறை சீட் வழங்கிய போது, ''என் அண்ணன் பெயரைக்கொண்ட இந்த சி.என்.அண்ணாதுரைக்கே சீட்..’' என குறிப்பிட்டு வழங்கியதாக அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ச்சியுடன்  கூறுகின்றனர். இதையடுத்து, மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது அரசியல் குரு எ.வ.வேலுவின் மூலம் சீட் சி.என். அண்ணாதுரைக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை  சி.என். அண்ணாதுரை வாகை சூடினார். 

அதனைத் தொடர்ந்து, நாடளுமன்றம் அவைக்குச் சென்ற சி.என். அண்ணாதுரை தொடர்ந்து தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். அதன் மூலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களை ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கச் செய்தார். திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதைத் திட்டத்துக்காகப் போராடி, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். ஆனால், எம்பி திட்டம் தொகுதிக்கு கொண்டு வந்தும் நிதி மத்திய அரசு ரிலீஸ் செய்யவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.  அதுமட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை, புதூர்நாடு மலைக் கிராமங்களில் 33 டவர்களை நிறுவுவதற்கான பணிகளை தனது தொகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் சி.என். அண்ணாதுரை அழுத்தம் கொடுத்து செய்து கொடுத்துள்ளார். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு காத்திருக்காமல் சி.என். அண்ணாதுரை தனது சொந்த செலவில் பர்வதமலைக்கு 40 சோலார் விளக்குகளை அமைத்துள்ளார். 

கடந்த முறை மத்தியில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்த காரணத்தால் திருவண்ணாமலை தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு  அளித்தால் மேலும், சி.என். அண்ணாதுரை சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மீண்டும் வேட்பாளராக சி.என். அண்ணாதுரை அறிவிக்கப்பட்டதில் இருந்து அவரது ஆதரவாளர்கள் இந்த முறையும் அவரை வெற்றி பெற வைக்க தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.