t

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சூரியந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்பிடிப்பதில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இரண்டு குழுவும் வெவ்வேறு சாதியைச்சேர்ந்தவர்கள். இதனால் இரு தரப்பும் அடிக்கடி வாய்ச் சண்டை போட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

இதில் சின்னப்பையன் மகன் 24 வயதான தனசேகரன் என்பவரை அதே ஊரைச் சேர்ந்த நடேசன் மகன் 30 வயதான ரவீந்திரன் என்கிற செட்டியார், சாமி கண்ணு மகன் 40 வயதான குமார், சந்திரன் மகன் 31 வயதான ரவீந்திரன் என்கிற பல்லு, ஆதிமூலம் மகன் 40 வயதான சங்கர் ஆகியோர் முன்விரோதம் காரணமாக தனசேகரின் சாதிப்பெயரைச் சொல்லி அசிங்கமாகத் திட்டியதாகவும், என்னை ஏன் சாதி பெயரைச் சொல்லி திட்டினாய் எனக்கேட்ட தனசேகரை அந்தக் கும்பல் தாக்கியதாகவும், இதைப் பார்த்துவிட்டு ஓடிவந்து கேட்ட தனசேகரின் சித்தப்பா மணி, சித்தி அலமேலு, மச்சான் ரவி ஆகியோரைக் கடுமையாகத் தாக்கி‌ அவர்களுடைய வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், எல்.இ.டி டிவி போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

t

Advertisment

இந்த சம்பவம் மார்ச் மாதம் 22ஆம் தேதி நடந்ததாகக் கூறி, தனசேகரன் வேட்டவலம் காவல்நிலையத்தில் மார்ச் 23ஆம் தேதி புகார் தந்துள்ளார். அவர் தந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக லாக்டவுன் காலமாக இருந்ததால் அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது லாக்டவுன் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதால், காவல்துறை வழக்கமான பணிக்குத் திரும்பியுள்ளது. அதேநேரத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிறோம் என ஒரு தரப்பு சமூக வலைத்தளத்தில்வீடியோ எடுத்து வெளியிட்டனர். இது பரபரப்பை உருவாக்கியது.

அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில், திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மேற்பார்வையில், வேட்டவலம் போலீசார், சாதி பெயரைச் சொல்லி திட்டிய 5 நபர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மே 7ஆம் தேதி நீதிமன்றத்தில் நிறுத்தி 4 பேரை வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

இந்த வழக்கில் சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ராஜிவ்காந்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்ததாகவும், அவரை ரிமாண்ட்டில் கணக்குக் காட்டி பின்னர் தப்பிக்க வைத்துள்ளார் எனக் குற்றம்சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் கூறியுள்ளனர். தற்போது இந்தப் பிரச்சனை தொடர்பாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறார்கள்.