Advertisment

100 கோடி ஆண்டுக்கான வித்தியாசமான காலண்டர்; அசத்தும் மனிதர்!

உங்க பிறந்த தேதி, மாதம், வருடத்தை சொன்னால், எந்த கிழமை பிறந்தீர்கள் என்று பதில் சொல்கிறார். 2025 ஜனவரி 15ந்தேதி தை பொங்கல் விழா. அன்று கிழமை என்ன? என்று கேட்டால் புதன்கிழமை என்று சரியாக சொல்கிறார். 2050ல் டிசம்பர் 25 கிருஸ்மஸ், எந்த கிழமையில் வருகிறது என்று கேட்டால், ஞாயிற்றுக்கிழமை என்று உடனே சொல்லிவிடுகிறார்.

Advertisment

s

இப்படி தேதி, மாதம், வருடத்தை சொன்னால் அன்று என்ன கிழமை எனச்சொல்லி அசத்துகிறார் அந்த மனிதர். அவர் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுக்காவில் உள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி. வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார். இவர்தான் ஒரு அட்டவணையை கையில் வைத்துக்கொண்டு ஒரு நிமிடத்தில் கிழமையை சொல்கிறார். இப்படி 100 கோடி ஆண்டுகளுக்கு தன்னால் சொல்ல முடியும் என சவால்விடுகிறார்.

இதுப்பற்றி அவரிடம் நாம் கேட்டபோது, ’’எனக்கு சிறு வயது முதலே கணிதத்தில் ஆர்வம். கணித போட்டியென்றால் வித்தியாசமாக முயற்சி செய்வேன். அப்படித்தான் நமக்கு நம்முடைய பிறந்ததேதி, மாதம், ஆண்டு தெரியும். கிழமை தெரியாது. ஒருசில ஆண்டு என்றால் சுலபமாக தேடி கண்டறிந்துவிடலாம், 20 ஆண்டுக்கு முந்தியது, 50 ஆண்டுக்கு முந்தியது, 100 ஆண்டுக்கு முந்தியது என்றால் எப்படி கண்டறிவது என யோசித்தேன்.

Advertisment

s

நாம் அதனை சுலபமாக கண்டறிய ஒரு காலண்டரை உருவாக்க வேண்டும் என முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டு 3 ஆண்டுகள் கடுமையான முறையில் கணக்கீடுகளை செய்து அட்டவணை 1, 2, 3, 4, 5, 6, 7 என 7 அட்டவணைகளை உருவாக்கினேன். முதல் அட்டவணை ஆண்டை குறிப்பிட்டும், இரண்டாவது டேபிள் மாதத்தை குறிப்பிட்டும், 3 முதல் 7 வரையிலான டேபிள் தேதி மற்றும் கிழமையை கொண்டு உருவாக்கினேன். நான் உருவாக்கிய அட்டவணையை கொண்டு யார் வேண்டுமானாலும் கிழமையை கண்டு பிடிக்கலாம். ஒருவர் பிறந்த ஆண்டு 1985 என்றால் கடைசி இரண்டு எண்கள் அதாவது 85 மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நேராக ஒரு ஆங்கில எழுத்து இருக்கும். அதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறந்த மாதத்துக்கு நேராக அந்த ஆங்கில எழுத்து எந்த வரிசையில் வருகிறது என அட்டவணையில் பார்க்க வேண்டும். அதற்கு நேராக கிழமை வரிசையில் அந்த எழுத்து எந்த வரிசையில் எந்த கிழமைக்கு நேராக வருகிறதோ அதுதான் நாம் தேடிய கிழமை. 100 கோடி ஆண்டுகளுக்கு கிழமையை அறிந்துக்கொள்ள முடியும்’’ என்றார்.

இந்த காலண்டரை ஆச்சர்யமாக பார்க்கும் பலரும் சுந்தரமூர்த்தியை பாராட்டி வருகின்றனர். அதோடு, பல வித்தியாசமான, அபூர்வமான புகைப்படங்கள் பழங்கால நாணயங்கள், தபால்தலைகளை சேகரித்து, அதனை கண்காட்சியில் வைத்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஆனால், தன் மாவட்டத்தில் தனது உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மட்டும் அவரிடத்தில் உள்ளது.

thiruvannamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe