Thiruvanmiyur Thiruvalluvar Nagar SBI ATM incident 3 people arrested

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காகக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒருவர் வந்திருக்கிறார். அப்பொழுது அவருடைய தகவல்களை ஏ.டி.எம்.-இல் பதிவு செய்த பிறகு பணம் வராமல் இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்துள்ளார். அதோடு இது குறித்து மும்பையில் உள்ள வங்கியின் தலைமையகத்திற்கும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் தொழில்நுட்ப பிரிவு பணியாளர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்.-இல் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, ஏ.டி.எம். மையத்திற்கு வந்த இருவர் கருப்பு நிறத்தில் ஒரு அட்டையை ஏ.டி.எம். இயந்திரத்தினுள் பொருத்துவது தொடர்பான சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் ஏ.டி.எம். இயந்திரத்தில் கோளாறை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது போலி சாவி மூலமாகத் திறந்து ஏ.டி.எம். இயந்திரத்தைத் திறந்து அதன் உள்ளே கருப்பு அட்டையைச் செலுத்தி இருக்கின்றனர். இதன் மூலம் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்தாலும் வெளியே வராதபடி தடை ஏற்படுத்தப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் கண்காணித்து குல்தீப் சிங், பிரிட்ஜ் பாட் மற்றும் ஸ்மித் யாதவ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து திருவான்மியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், வேறு ஏ.டி.எம். மையங்களில் இந்த கும்பல் இதே போன்று நூதன முறையில் பணத்தை எடுத்துச் சென்றனரா?, மேலும், இவர்கள் எங்கு எல்லாம் இதே போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள்? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் நூதன முறையில் திருட முயன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.