/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3568.jpg)
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திருவிழாவிற்கு முன்பு அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட முன்னேற்பாடு கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் பத்துமுறை நடைபெற்றன. மூன்று கூட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வேலு அதிகாரிகளிடம் பேசும்போது, தீபத் திருவிழா நாட்களில் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
திருவிழா நாட்களில் திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதையில் சிறு சிறு வியாபாரக் கடைகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் தினசரி வாடகை என்கிற பெயரில் நகராட்சி மற்றும் ஊராட்சிகள் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. கடந்த காலத்தில் தனக்கே வசூல் செய்வதாக புகார்களும் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்படி வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக திருவிழா மற்றும் பெளர்ணமி நாட்களில் வாகனக் கட்டணம் வசூலிக்க நகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால் நகரத்திற்கு வரும் சாலைகளில் வாகனங்களை மடக்கி அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நகராட்சி பெயரைச் சொல்லி ரூ 50, 100 என வசூல் செய்கின்றனர். தீபத்திருவிழா மற்றும் பெளர்ணமி நாளில் தண்டராம்பட்டு சாலை, மணலூர்பேட்டை சாலை, திருக்கோவிலூர் சாலை, விழுப்புரம் சாலை, காஞ்சி சாலை வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மக்கள் நெருக்கடியால் நகரத்துக்குள் வரமுடியாமல் சாலை ஓரம் இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து நிறுத்தியதற்கு கட்டணம் வசூல் செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1192.jpg)
திருவிழா தினங்களில் நகரத்தில் சாலையோரம் கடை வைத்திருந்தவர்களிடம் ஒருநாள் வாடகை ரூபாய் 200 முதல் 500 வரை வசூல் நடத்தினர். கிரிவலப் பாதையில் கடை வைத்திருந்தவர்களிடமும் அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தியந்தல் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பமிட்ட கட்டண ரசீது புத்தகத்துடன் ஒவ்வொரு கடையாக சென்று கட்டணம் வசூலித்தனர். வீடியோ எடுத்த செய்தியாளரையும் அத்தியந்தல் ஊராட்சி மன்றத்தலைவரின் உத்தரவின் பெயரில் வசூலில் ஈடுபட்டவர்கள் மிரட்டினர்.
அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டத்தில், தீபத்திருவிழா நாளில் சட்டவிரோதமாக வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன.அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் சொன்னதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதையே இந்தாண்டும் வசூல் நடந்ததுஉறுதி செய்தது.
வருங்காலங்களில் காவல்துறை மற்றும் நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் கட்டணம் இல்லை என்பதை வெளியூர், வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மிரட்டி வசூல் செய்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
Follow Us