Skip to main content

திருவள்ளுவர் தினத்தில் ஒரு ரூபாய்க்கு தேநீர் மற்றும் மரக்கன்று வழங்கிய இளைஞர்கள்...

Published on 16/01/2020 | Edited on 16/01/2020

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கடந்த பல வருடங்களாக தேநீர் கடை நடத்தி வரும் தங்கவேலனார் மாணவர்களுக்கு தினசரி திருக்குறள் வகுப்புகள் எடுப்பதுடன், பட்டிமன்றங்களில் பேசும் போது திருக்குறளை உதாரணமாக முன்வைத்து பேசுவது வழக்கமாக கொண்டுள்ளார். 

 

thiruvalluvar day celebrations thanjavur

 

 

அதே போல திருவள்ளுவர் தினத்தில் எத்தனை பேர் வந்தாலும் ரூ ஒன்றுக்கு தேநீர் வழங்குவதும் வழக்கம். 
இந்த நிலையில் தான் திருவள்ளுவர் சர்ச்சை கிளம்பிய பிறகு திருவள்ளுவர் மீது இளைஞர்களுக்கும் பற்றுதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் முதல் முறையாக  மக்கள் நலன் இயக்கத்தின் சார்பில் திரண்ட இளைஞர்கள், உலகப் பேராசான் திருவள்ளுவர் பிறந்த தினத்தில் கடைக்கு வரும் அனைவருக்கும் ரூ ஒன்றுக்கு தேநீர் வழங்கியதுடன் ஒரு மரக்கன்றையும் இலவசமாக வழங்கினார்கள். கூடவே மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களையும் வழங்கினார்கள். 

இதைப்பார்த்த ஒரு ஆசிரியர், "திருவள்ளுவரைப் பற்றி இளைஞர்கள் அறிந்திருந்தாலும் தொடர்ந்து அவரை பின்பற்றுவதில்லை. ஆனால் கடந்த சில மாதங்கள் முன்பு அவருக்கு காவி சாயம் பூசப்பட்டதால் வெகுண்ட இளைஞர்கள் இப்போது திருக்குறளையும் திருவள்ளுவரையும் பாதுகாப்போம் என்று கிளம்பியுள்ளது பாராட்டத்தக்கது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதிய தாலுகாவை அறிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin announced the new taluk at thanjavur district

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு செய்து புதிய வட்டமாக திருவோணம் பகுதியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், ‘தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்’ என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும் வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. 

இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர் துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர், திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார். 

அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

இளம்பெண் கொடூரக் கொலை; திருமணமான பிறகும் காதலியை விட மறுத்த காதலன்!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 lover who refused to let go of his girlfriend even after marriage

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்காடு ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால் தென்கரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவமனை சமையலர் சிவகுமார் - கோவிந்தம்மாள் தம்பதியின் மகள் அம்மு என்ற சிவஜோதி (வயது 19). சிவகுமார் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமையலராகவும் கோவிந்தம்மாள் பேராவூரணி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்கள். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள சிவஜோதி வீட்டிலேயே இருந்துள்ளார். 

இவர்கள் ஏற்கனவே பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே செக்கடித்தோப்பு என்ற பகுதியில் குடியிருந்தபோது, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த காளி என்ற காளீஸ்வரன்(23), பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்சில் ஓட்டுநராகவும், லாரி ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அப்போது காளீஸ்வரனுக்கும் சிவஜோதிக்கும் காதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு பெண்ணின் பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதனால் சிவஜோதியை பார்க்க அவரது பெற்றோர், சகோதரர்கள் இருக்கும் போதே காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சகஜமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு காளீஸ்வரன் பேராவூரணியை விட்டு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். தூரத்தில் இருந்தாலும் காளீஸ்வரனும் சிவஜோதியும் தொலைபேசி மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆன தகவல் தெரிந்த பிறகு சிவஜோதி, காளீஸ்வரனுடன் பேசாமல் இருந்துள்ளார். செல்போன் மூலம் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளனர். 

தனக்கு திருமணமானாலும் காதலியை மறக்க முடியாத நிலையில் இருந்த காளீஸ்வரன், செவ்வாய்க்கிழமை மாலை பொன்காடு ஆனந்தவல்லி வாய்க்கால் பகுதியில் உள்ள சிவஜோதியை பார்ப்பதற்காக குடிபோதையில் வந்த காளீஸ்வரன், சிவஜோதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு வற்புறுத்தியுள்ளார். திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன்; நீ போய் உன் மனைவியுடன் போய் வாழ்ந்துக்க என்று சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார். வாய்த் தகராறு முற்றவே சிவஜோதியின் பெற்றோர், பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து வந்த காவலர்கள் காளீஸ்வரனை கண்டித்து அனுப்பியுள்ளனர். காதலியை விட்டுப் போக நினைக்காத காளீஸ்வரன், புதன்கிழமை அதிகாலை மீண்டும் வந்து தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியிடம் தன்னுடன் வந்து விடுமாறு மீண்டும் அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிவஜோதி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வீட்டுக் கதவின் பின்புறம் இருந்த கல்லை எடுத்து சிவஜோதி தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவஜோதி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து சிவஜோதியின் சகோதரர்கள் அவனைப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல்துறையினர், சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய காளீஸ்வரனை தேடி வருகின்றனர். 

மேலும் தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு, அது சிறிது தூரம் ஓடி நின்றது. காதலித்த இளம்பெண், திருமணமான தன்னுடன் வராமல் தவிர்க்கவே ஆத்திரமடைந்த காதலன் கல்லை தலையில் தூக்கிப் போட்டுக் கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

“காளீஸ்வரன் முதல் நாள் சண்டை போட்ட போதே போலீசாருக்கு தகவல் சொன்னோம். அவங்க வந்து அவனை அழைச்சுட்டு போய் இருந்தால் எங்க புள்ளை உயிர் போயிருக்காது. வந்த போலீசார் அறிவுரை கூறி அனுப்பியதால் மீண்டும் போதையில் வந்து எங்க புள்ளைய கொன்னுட்டானே! எங்களுக்குன்னு கேட்க ஆள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா...” என்று உறவினர்கள் கதறிய கதறல் மருத்துவமனை வட்டாரத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்தது.