thirunelveli lawyer incident

நெல்லையின் பாளை பகுதியைச் சேர்ந்த பிரபலமான வழக்கறிஞர் பிரம்மா. எந்நேரமும் வழக்குகளால் பரபரப்பாககாணப்படுபவர். தனியார் நிறுவனங்கள் ஹோட்டல்கள் மற்றும் அரசு சம்பந்தமான வழக்குகளின் தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் ஆதாரங்களைத் திரட்டி வழக்காடும் பிரம்மா, நுகர்வோர் நீதிமன்றங்களிலும் பொதுமக்களுக்காக வாதாடி வெற்றி பெற்றவர். குறிப்பாக ஏழை மக்களுக்கு உதவுபவர். ஊடகங்களின் முற்றுகைக்கும் உட்டபட்டவர் பிரம்மா.

Advertisment

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பாளையில் செயல்பட்ட மதுரம் ஹோட்டலுக்கு எதிரான அதன் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரம்மா மூலம் வழக்கு தொடுத்ததில் பிரம்மா வெற்றி அடைந்திருக்கிறார். இதனால் அவர் மீது எதிர்தரப்பு வன்மம் கொண்டிருந்தது. இதனிடையே நேற்றிரவு பிரம்மா தன் நண்பர்களுடன் முருகன் குறிச்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுரம் ஹோட்டல் கிளையில் காபி சாப்பிட சென்றவர் சப்ளையரிடம் சுவீட் காபி ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தனர்.

Advertisment

அந்த சமயம் ஹோட்டல் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என 10 பேர்கள் அவர் பக்கம் வந்தவர்கள், திடீரென வக்கீல் பிரம்மாவிடம், நீ தானே அரசு அதிகாரிகளிடம் தகவலரியும் உரிமைச் சட்டங்களின் விவரங்களை வாங்கி எங்களுக்கு எதிராக வழக்குத்தொடுத்தாய். என்று கத்திக் கொண்டே திடீரென அவர் முகத்தில் சுடுகிற வெந்நீரை ஊற்றினர். வலி பொறுக்கமாட்டாத பிரம்மா அலறினார். உதவிக்கு வந்த அவரது நண்பரை மிரட்டி விட்டு ஹோட்டலின் ஷட்டரை இழுத்து மூடிக் கொண்டு பிரம்மாவைச் சூழ்ந்து கொண்டுத் தாக்கினர். இதனை பிரம்மாவின் நண்பர் தன் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். தகவலறிந்த பாளை உதவிக் கமிஷ்னர் ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் ஸ்பாட்டுக்கு வந்து படுகாயமடைந்த வக்கீல் பிரம்மாவை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதையறிந்த வழக்கறிஞர்களின் சங்கத் தலைவர் சூரிய நாராயணன் தலைமையில் வக்கீல்கள் ஓட்டலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பிரம்மாவைத் தாக்கிய ஓட்டல் அதிபர், ஊழியர்களைக் கைது செய்யக் கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பானது. நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் வாக்குறுதிகொடுத்த பிறகே போராட்டம் வாபஸானது.

Advertisment

இதுகுறித்து பிரம்மா பாளை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, ஓட்டல் உரிமையாளர் தரப்பிலும் பிரம்மா மீது புகார் தரப்பட்டிருக்கிறது. தாக்குதல் காரணமாக ஓட்டல் உரிமையாளர் அருணாசலத்தின் மகன்களான ஹரிஹரன், மணிசங்கர் மற்றும் ஊழியர்கள் 4 பேர்கள் விசாரணைக்காகப் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஹோட்டல் மூடப்பட்டது. நெல்லையில் வக்கீல் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல் வழக்கறிஞர்களின் வட்டாரத்திலும் பரபரப்பைகிளப்பியிருக்கிறது.