நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே அமைந்துள்ள ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசு. இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அடுத்து புஷ்பலதா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சிலுவைக்கனி, மஞ்சுளா என்ற இரண்டு மகள்களும் ஆறுமுகம் என்ற மகன் உட்பட 3 குழந்தைகள் உள்ளன. ஜேசு கூலிவேலை பார்த்து குடும்பத்தை நகர்த்துபவர். வறுமையின் துரத்தலுடன் அவரது குடும்ப வாழ்க்கை ஓடியிருக்கிறது என்கிறார்கள்.

Advertisment

thirunelveli baby issue

இந்நிலையில் புஷ்பலதா மீண்டும் கர்ப்பமானார். நெல்லை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கடந்த 17 நாட்களுக்கு முன்னர், ஆண்,பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தச் சூழலில் வருமானக் குறைவு காரணமாக குடும்பத்தை நகர்த்த மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனிடையே சம்பவத்தன்று 3 பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்றுவிட புஷ்பலதா இரட்டைக் குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தார். அப்போது வந்த கணவர் ஜேசு, அதில் பெண் சிசுவை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றார். எங்கே கொண்டு போகிறீர்கள் என்று மனைவி கேட்டதுக்கு, தடுப்பு ஊசி போடுவதற்காக எடுத்துச் செல்கிறேன் என்றிருக்கிறார் இதில் சந்தேகமடைந்த மனைவி புஷ்பலதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் இரவு வரை தேடியும் ஜேசுவும் குழந்தையும் கிடைக்கவில்லை. இதனையடுத்து புஷ்பலதா வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் ஆறுமுகப்பட்டியில் பதுங்கியிருந்த ஜேசுவைப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் வறுமை காரணமாக பெற்ற பெண் குழந்தையை தரகர் ஒருவர் மூலம் ஆலங்குளத்திலுள்ள தங்கராஜ் என்பவரிடம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு விற்றதாக கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் ஆலங்குளத்திலுள்ள தங்கராஜின் வீட்டிலிருந்து பெண் குழந்தையை மீட்டனர்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தந்தை ஜேசு, குழந்தையை விலைக்கு வாங்கிய தங்கராஜ், தரகர்களான நெல்லையப்பன், கண்ணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். ஜேசுவிடமிருந்து 48 ஆயிரம் ரொக்கம், 32 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அம்பை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisment

ஆலங்குளம் காப்பகத்தில் வைக்கப்பட்ட பெண் குழந்தை நீதிமன்ற உத்தரவுப்படி தாயிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.