Advertisment

“திமுக இல்லாததால் கூட்டணியில் பிளவு என நம்ப வேண்டாம்” - திருமாவளவன் எம்.பி

thirumavalavan talk about nlc and dmk alliance

என்.எல்.சி விரிவாக்கத்துக்காக குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும்ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, குடியிருக்க மாற்று இடம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜாவாஹிருல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜீ, ம.க.இ.க இயக்க பிரச்சாரப் பாடகர் கோவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு என்.எல்.சி நிர்வாகத்திற்குஎதிராக கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

Advertisment

நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய பேரணி முடிவில் மத்திய பேருந்து நிலையம் எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தி.வேல்முருகன் பேசும்போது, “இந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று மனு அளிக்க உள்ளோம். கடந்த காலங்களில் என்.எல்.சி நிர்வாகத்தோடு பிரச்சனை ஏற்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் பிரச்சினைகளை பேசி தீர்த்து வைத்தார்.

தற்போது இங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வரவேண்டும். இதன் மூலம் விவசாயிகள் வாழ்வில், அவர்களது வயிற்றில் பால்வார்க்கும் வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைக்கும். காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டி நிலத்தைக் கையகப்படுத்த என்.எல்.சி முயற்சிக்கிறது. இந்த நிலையை என்.எல்.சி நிர்வாகம் கைவிட வேண்டும். மக்களை மிரட்டினால் அங்கு அனைத்து கட்சி தலைவர்களும் வருவார்கள் என்று அச்சம் என்.எல்.சிக்கு ஏற்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த பொதுக்கூட்ட பேரணி நடத்தினோம்" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “என்.எல்.சி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்குவதில்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்று பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்தப் போவதாகச் சொல்லி உள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தினால் என்.எல்.சி நிறுவனம் தனியார் மயமாக்கப்படும். என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு இழப்பீட்டு தொகையும், வேலைவாய்ப்பும் வழங்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “என்.எல்.சிநிலம் கொடுத்த மக்களை வஞ்சித்து வருகிறது. தற்போது கூட்டணி அமைத்துள்ள இந்த அமைப்பு விவசாயிகளின்தொழிலாளர்களின் நலனைக் காக்க தொடர்ந்து போராடும்” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, “என்.எல்.சிக்கு 65 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்கள் கூட இன்னும் முழுமையாக நிவாரணத் தொகை, வேலைவாய்ப்பு பெறவில்லை. என்.எல்.சி ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தத்தொழிலாளர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். என்.எல்.சியால் நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களிலும்வேலைவாய்ப்பும், இலாபத்தில் பங்கும் தரவேண்டும. சிலர் இங்கு என்.எல்.சி நிறுவனம் வேண்டாம் என்கிறார்கள். வேண்டாம் என்றால் அது அதானிக்கு விற்கப்பட்டுவிடும். என்.எல்.சியைமூடுவதற்கு போராட்டம் தேவையில்லை. நாங்கள் அரசியல் காரணங்களுக்காக இந்த கூட்டணியை ஏற்படுத்தவில்லை. நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக இந்த கூட்டணி அமைத்துள்ளோம். இந்த பேரணி இப்பகுதி மக்களின் உரிமைகளை மீட்க போர் அணியாக மாறும். இங்கு தி.மு.க இல்லை.இதனால் அரசியல் பிளவு ஏற்பட்டுள்ளது என்று சிலர் திரித்து பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். ஆளும் கட்சியான திமுக போராட்டத்திற்கு வர இயலாது. நம்மோடு ஒத்த கருத்துள்ள தி.மு.க நம்முடைய போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர்கள் அறிவழகன், சிவக்குமார் மற்றும் தோழமை கட்சிகளின் அனைத்து அமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் இடம் கொடுத்து பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட உள்ள கிராமங்களின் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

vck nlc Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe