Thirumavalavan says pahalgam incident is being used for propaganda

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீருக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். பஹல்காம் பகுதியில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கும், ராணுவப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையை மூடுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், இந்தியாவிற்கு வர பாகிஸ்தான் நாட்டினருக்கு அனுமதி இல்லை எனவும், பாகிஸ்தானுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எஸ்விஇஎஸ்(SVES) விசாக்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முக்கிய நீர் ஆதாரமாகப் பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய சிந்து நதிநீரைத் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது. அதே சமயம் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தி கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், காஷ்மீர் தாக்குதலை பரப்புரைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது கசப்பளிக்கிறது என்று விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீர் தாக்குதலை பரப்புரைக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது கசப்பளிக்கிறது. காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். அரசியலுக்காக இதை வலியுறுத்த வில்லை. நாட்டின் பாதுகாப்பு கருதி சொன்னேன் என்று தெரிவித்துள்ளார்.