thirumavalavan said vck protest against waqf bill ammendment

இஸ்லாமியர்கள் சொத்துக்களை நிர்வகிப்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பான வக்ஃப் வாரியத்தில், இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோரை இடம்பெறச் செய்வது, வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டது. அந்த கூட்டுக்குழுவில் இடம்பெற்ற திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு மத்திய பா.ஜ.க அரசு சில தினங்களுக்கு முன்பு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் அந்த சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வி.சி.க. சார்பிலும் போராட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் என்று சொல்ல கூடிய அளவுக்கு வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாஜக அரசு கொண்டு நிறைவேற்றி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பிஜேபி அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றி உள்ளனர். வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களில் தலையிடாத மத்திய அரசு வக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது.

Advertisment

வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரஉள்ளோம். 232 வாக்காளர்கள் திருத்த சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளோம். மாநிலங்கள் அவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளோம். தமிழகத்தில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பாஜக இதனை சாதித்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது.

பிரதமர் மோடி இலங்கை பயணம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மோடி இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம். நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. இந்த சூழலில் 9ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தினை தமிழக முதல்வர் கூட்டி உள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பீகாரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர் இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடி” என தெரிவித்தார்.