Thirumavalavan' meeting with former AIADMK minister Vaigai Selvan

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுடன், விசிக தலைவர் திருமாவளவன் நடத்திய திடீர் சந்திப்பை தொடர்ந்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி மாற்றம் குறித்த செய்தி பரபரப்பாகியிருக்கிறது.

‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விசிக சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திருமாவளவனை தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது, ‘பேசு பேசு நல்லா பேசு’ என்ற தான் எழுதிய புத்தகத்தை வைகைச்செல்வன் திருமாவளவனிடம் கொடுத்தார். தொடர்ந்து இருவரும் அரசியல் குறித்துக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசியுள்ளனர்.

Advertisment

ஏற்கனவே திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்ஸும் ‘எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்’ என்று கூறிவருகிறார். அதேவேளையில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கொடுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதாக விசிக பொதுவெளியில் பேசிக்கொண்டு இருக்கிறது.

இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை, திருமாவளவன் சந்தித்திருப்பதும் நீண்ட நேரம் பேசியிருப்பதும் பெரும் அரசியல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது.