ADVERTISEMENT

“இந்தியாவில் மதிக்கப்படும் தலைவராக உயர்ந்திருக்கிறார் திருமாவளவன்”- வைகோ

05:51 PM Apr 11, 2024 | ArunPrakash

அரியலூர் பேருந்து நிலையம் அருகே விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயம்கொண்டான் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அப்போது பேசிய வைகோ, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய தேர்தல். இந்தியா தமிழ்நாடு எந்த திசையில் செல்லும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையேயான போர் இந்த தேர்தல். பேசுகின்ற இடங்களில் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திழுக்க கூடிய எனது சகோதரருக்கு வாக்கு சேகரிக்க விரும்பி வந்துள்ளேன். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு வட நாட்டுப்பெயர்களை சூட்டுகின்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய மாவீரர் தான் திருமாவளவன்.

ADVERTISEMENT

திராவிட இயக்கத்தை அழிப்பேன் என்று பிரதமர் தனது பதவியின் மதிப்பறியாது பேசுகிறார். பிரதமரே இது திராவிட இயக்க பூமி, அதன் தலைவர்களாலும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் பாடுபட்ட வளர்த்த இயக்கம் தான். மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி போகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் நாடாளுமன்ற‌ முறையை மாற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்து, ஜனாதிபதி ஆகலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார். திராவிட இயக்கம் உள்ளவரை அது நடக்காது. நான் திமுக-வில் இருந்து வெளியேறி இருந்தாலும் மீண்டும் குடும்பத்தில் இணைத்துள்ளேன். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் மு‌க‌‌ ஸ்டாலின் விளங்குகிறார்.

டெல்லி மும்பை கூட்டங்களில் அனைத்து தலைவர்களும் ஸ்டாலினுடன் வந்து புகைப்படம் எடுக்குமளவுக்கு புகழ்பெற்றுள்ளார். குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் திராவிட மாடலின் முதல்வர். இத்திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதைத் தாண்டி‌ கனடா போன்ற பல நாடுகளும் பின்பற்றுகின்றனர். உலகிற்கு வழிகாட்டும் தகுதியை ஸ்டாலின் பெற்றுள்ளார் என்பதை எண்ணி மகிழ்கிறேன். தாய்க்குலங்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார் முதல்வர். இந்த திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பவர் தொல்.திருமாவளவன்.

அரியலூர் மாவட்டத்தில் தான் மொழிக்காக கீழப்பலூர் சின்னசாமி மரணமடைந்தார். மேலும், மாணவி அனிதா அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மரணமடைந்தார். இந்தியாவில் மதிக்கப்படும் தலைவராக உயர்ந்திருக்கிறார். வட நாட்டு தலைவர்களும் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திராவிட இயக்கத்தின் பக்கபலமாக இருக்க வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்துபவர் திருமாவளவன். இங்கே வந்து மோடி, நட்டாக்கள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள். இந்தியில் எழுதி வைத்து பாதி திருக்குறளை பேசி எங்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆர்.என்.ரவி என்ற உளறுவாயன் ஆளுநர் உரையில் விஷத்தை கக்கி வருகிறார். அண்ணா, பெரியார், காமராஜர் உள்ளிட்டோர் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். 5 மாடி ஹோட்டல் போல இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சாவர்க்கர் பிறந்தநாளில் திறந்துவைத்தார் மோடி. கோட்சேயின் கூட்டம் பகிரங்கமாக உலவுகின்றனர் இன்று. நமது மொழிக்கு மோடியின் வடிவில் ஆபத்து வருகிறது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். தமிழ்நாடு இந்துத்துவ சக்திகளுக்கு மரண அடி கொடுக்கும்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT