Advertisment

விஜய்யுடன் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பா? - திருமாவளவன் விளக்கம்

Thirumavalavan explains about participating in the book launch with Vijay

Advertisment

அரியலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சியில் இருந்து அவர் சாலை மார்க்கமாக அரியலூர் புறப்பட்டார்.

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பஞ்சமி நிலங்கள் மீட்பு தொடர்பாக ஏற்கனவே கலைஞர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மீண்டும் இயங்க வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். கட்சியின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் தற்போது கவனத்தைக் குவித்துள்ளோம். 234 தொகுதிகளுக்கும் மாவட்டச் செயலாளர் நியமிக்க உள்ளோம். கூட்டணி தொடர்பாக பேச எந்த தேவையும் எழவில்லை. ஏற்கனவே நாங்கள் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ளோம்.

இரண்டு கூட்டணிகள் உருவாக்கத்திலும் விசிக விற்கும் பங்கு உண்டு. நாங்கள் உருவாக்கிய கூட்டணியை வலுப்படுத்த வேண்டும், அதை மேலும் வெற்றிகரமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. இந்த கூட்டணிகளை விட்டு விட்டு இன்னொரு கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்கிற தேவை இல்லை. வேண்டுமென்றே வி.சி.க மீது சந்தேகத்தை எழுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள். இதை முற்றிலுமாக மறுக்கிறேன்.

Advertisment

வி.சி.க வில் எந்த ஊசலாட்டமும் இல்லை. கூட்டணி எங்கள் கூட்டணி; அதைச் சிதறடிக்க வேண்டிய தேவை எங்களுக்கு எங்கிருந்து எழுந்தது? யாரோ சிலர் போகிற போக்கில் ஏதோ பேசிவிட்டு வி.சி.க மீது சந்தேகத்தை எழுப்ப முயற்சிக்கிறார்கள் அதை நான் நூறு சதவீதம் மறுக்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தான் வி.சி.க இடம்பெறும். இனி அதில் கேள்விக்கே இடமில்லை, இனி யாரும் அந்த கேள்வியை எழுப்ப வேண்டாம்.

அம்பேத்கர் குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்பது குறித்து ஓராண்டுக்கு முன்பு இசைவு தெரிவித்திருந்தேன். அந்த நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி நிகழ்ச்சி நடந்திருந்தால் அதில் தமிழக முதலமைச்சர், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக கூறியிருந்தார்கள். தற்போது டிசம்பர் மாதம் அந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக கூறுகிறார்கள்.

தற்போதைய அரசியல் சூழலில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து எங்கள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களோடு ஆலோசித்து முடிவெடுப்பேன். திராவிடம் என்பது தமிழர்களுக்கு எதிரானது என்பதைப் போல ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்; அது தவறு. திராவிடத்தால் விழுந்தோம் என பேசுவது தவறு. சாதியால் தான் நாம் வீழ்ந்துள்ளோம். ஜாதியை எதிர்க்க வேண்டும் என்றால் பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டும். அதை மடைமாற்றம் செய்யவே திராவிடத்தை எதிர்க்கிறார்கள்.

திராவிடம் என்பது ஒரு கருத்தியல் அது ஆரியத்திற்கு எதிரான ஒரு கருத்தியல். திராவிடத்தில் இருந்து தான் தமிழ் தேசியம் என்பது முகிழ்ந்துள்ளது. பெரியார் அண்ணா கலைஞர் உள்ளிட்டோர் திராவிடத்தில் இருந்து தான் தமிழ் தேசியத்தைப் பேசினார்கள். திராவிடத்தை தமிழ் தேசியத்திற்கு எதிராக திருப்புவது தவறு” என்றார்.

Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe