விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை: ‘’இந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட்டோரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 1950 ஆகஸ்டு 10 ஆம் நாள் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டனர். எனவே,அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க அந்த நாளை தலித் கிறித்தவர்கள் கறுப்பு நாளாகக் கடைபிடித்து வருகின்றனர். அவர்தம் அறப் போராட்டம் வெற்றிபெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்து மதத்தைப் பின்பற்றுவோரைத்தான் எஸ்சி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் ஆணையில் 1956 ல் திருத்தம் கொண்டுவரப்பட்டு சீக்கிய மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்ப்பதற்கு வகைசெய்யப்பட்டது. அடுத்து 1990 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தால் பௌத்த மதத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரையும் எஸ்சி பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோர் மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்கப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்படுகின்றனர்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 'ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்' தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என அறிக்கை அளித்து 10 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட மத்திய அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக் குரியதாகும்.
ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றுவதற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25 ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைத் தழுவிய தாழ்த்தப்பட்டோரை மட்டும் எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் வஞ்சிப்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இந்த அநீதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த 13 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் இந்து மதத்தின் சாதி கோட்பாடு எல்லா மதங்களையும் தொற்றிப் பாழாக்கிவிட்டதால் எந்த மதத்தைத் தழுவினாலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடு மைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த உண்மை ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும்கூட தலித் கிறித்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்காமல் பாரபட்சம் காட்டுகின்றனர். இந்தப் போக்கு மாறவேண்டும்.
சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறித்தவத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காட்டப்படவேண்டும். இதில் ஓரவஞ்சனை செய்வது கூடாது என மத்திய அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.
இந்நிலையில், ஆகஸ்டு 10 ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கும் தலித் கிறித்தவர்களின் அறப் போராட்டம் வெல்க என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்!’’