ADVERTISEMENT

  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! திருமாவளவன்

05:34 PM Jul 03, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

ADVERTISEMENT

மாண்புமிகு குடியரசுத் தலைவரது ஆலோசனையின் பேரில் தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எடுத்த முன்முயற்சியின் காரணமாக மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தி ,ஒடியா ,அசாமி, தெலுங்கு , கன்னடம் ஆகிய 5 மொழிகளில் முதலில் தீர்ப்புகள் வெளியிடப்படும் என்று தெரியவந்திருக்கிறது. இந்த மொழிகள் பேசும் மாநிலங்களில் இருந்து வரும் மேல்முறையீடு களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழ் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழில் சட்டம், நீதி தொடர்பான கலைச்சொற்கள் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கின்றன. எனவே தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடுவது கடினமல்ல.

உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் இதற்காக ஒருமனதாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. எனவே , இவ்வாறு தமிழை நீதிமன்றத்தில் பயன்படுத்துவது தொடர்பான கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிடாமல் தவிர்த்திருப்பது ஏற்புடையது அல்ல. உடனே இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட வகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். ’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT