Skip to main content

நிர்மலா சீத்தாராமனிடம் திருமாவளவன் வலியுறுத்திய 12 கோரிக்கைகள்

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

 


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும் , போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட எஸ் சி / எஸ்டி மக்களுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.  ரவிக்குமார் எம்.பியும் விழுப்புரம் தொகுதி தொடர்பாகவும், தமிழகத் திட்டங்கள் தொடர்பாகவும் தனியே கோரிக்கை மனுவை அளித்தார்.  நிச்சயம் உதவுவதாக நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

 

n

 

நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் வலியுறுத்திய கோரிக்கைகள்:

1.கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. இதை சரி செய்வதற்கு சிறப்பு திட்டம் தேவை. தொழிற்துறையில் அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தையும் அதற்கான உதவித்தொகையையும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுகிறேன்.

 

2.விவசாயிகள் துயரத்தில் தவிக்கின்றனர்.பல விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

3.வருமான வரி வரம்பை ரூபாய் பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

4.குறிப்பிட்ட காலத்திற்குள் குடிசை வீடுகளை நிரந்த வீடுகளாக மாற்றும் பெரும் திட்டத்தை இந்த பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

 

5.தலித் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான சிறப்பு பள்ளிகளை நாடு முழுவதும் தொடங்குவதற்கு 2008 ஆம் ஆண்டு திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையிலான  அமைச்சர்கள் குழு பரிந்துரைத்தது. ஆனால் முந்தைய அரசுகள் அதை செயல்படுத்தவில்லை. அந்த திட்டத்துக்கான அறிவிப்பை இந்த முதல்
பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.

 

n

 

6.ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘Post Matric Scholarship’ திட்டம் தொடங்கப்பட்டது. எவ்வளவு எண்ணிக்கையில் தலித் மாணவ மாணவியர் பயின்றாலும் அவர்களுக்கு தேவையான உதவித்தொகையை வழங்கும் திறந்த நிலைத்திட்டம் இது. ஆனால் போதிய
நிதி ஒதுக்கீடு செய்யாததால் 11000 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவைத் தொகை உள்ளது. இது தலித் மாணவர்களுக்கு சாதகமற்ற ஒரு சூழ்நிலையை உருவாகியுள்ளது. உதவித்தொகை மறுக்கப்பட்ட பல தலித் மாணவர்கள் தங்களது படிப்பை இடையில் நிறுத்தியுள்ளனர். ‘Post Matric ScholarShip’ திட்டத்துக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

7.2018 – 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ‘SCSP’ (Scheduled Caste Sub Plan) திட்டத்திற்கு 1,11,780.33 கோடி ரூபாயும் ‘TSP’ திட்டத்திற்கு 48,108.04 கோடி ரூபாயும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தலித் மற்றும்
பழங்குடியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதியை இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

8.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 

9. 'Smart City' திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

10.தமிழ்நாடு ஒரு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். மேற்பரப்பு நீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம். கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் தான் உடனடி தீர்வாகும்.
விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளை தொடங்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

11.வறட்சி, பேரிடர்களை சந்திப்பதற்கு போதிய நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

 

12.நம் நாட்டில் உள்ள நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு உதவ ‘அனைவருக்கும் அடிப்படை வருமானம் வழங்கும் திட்டம்’ போன்றதொரு திட்டத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி  

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

‘அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?'' தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை'' என பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறேன். மக்கள் வரிப்பணத்தைத்தானே கேட்கிறேன் என  பேசியதை தப்புன்னு சொல்றாங்களா. நான் வேணும்னா இப்படி சொல்லட்டுமா. மாண்புமிகு மத்திய அமைச்சரோட மரியாதைக்குரிய அப்பா சொத்தை நாங்க கேட்கல. தமிழக மக்கள் கட்டும் வரிப் பணத்தை தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜனும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

 

Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

இந்நிலையில், சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா? மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் மரியாதையாக நான் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய சொந்த விஷயத்திற்காக கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் கடும் பேரிடரில் உள்ளனர். பேரிடர் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சோசியல் மீடியாவில் கூட ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். 10 வருட பாஜக ஆட்சியே கடும் பேரிடர் என்பதால் இதனை தனியாக பேரிடர் என்று பார்க்க மாட்டோம் என்று சொல்கிறோம் என பதிவிட்டிருந்தார். அதுபோல் தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதீர்கள். எதை வைத்து அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

மத்திய குழுவை அமைத்தார்கள். அவர்கள் எல்லாருமே இங்கு வந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் நிதியமைச்சர் இதனை முழுவதுமாக அரசியல் ஆக்க முயற்சிக்கிறார். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக சென்னை மக்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. நேற்று மாலை வரை ஏரல் பகுதியில் இருந்தேன். நேற்று முன்தினம் காயல்பட்டினம் சென்று இருந்தேன். இன்னும் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. எனவே மீண்டும் நிவாரண தொகையை கொடுங்கள் என மரியாதையாக கேட்கிறேன். நான் என்ன அநாகரிகமாக பேசி விட்டேன். 'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? தெரியாமல் தான் கேட்கிறேன்.  மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்'' என்றார்.

Next Story

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 Annamalai meeting with Nirmala Sitharaman

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். நேற்று திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வெளியாகி இருந்த நிலையில், இந்த சந்திப்பில் அது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் யூகங்கள் கிளம்பியுள்ளன.

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.