Skip to main content

கல்லாலான கை உரல் வழங்கும் நிகழ்ச்சி!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020
sanmugam

 

உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு  கரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடும் சமூக செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பாரம்பரிய மருத்துவர்கள் சார்பில் கல்லாலான கை உரல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பாரம்பரியத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்கம் சார்பில் வீடுகளில் மிக்சி கிரைண்டர் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் அம்மாவின் கைப்பக்குவமான  கல்லாலான கை உரல்  வழங்கப்பட்டது. 

 

இதன் மூலம் பாரம்பரிய முறையிலான இஞ்சி பூண்டு மிளகு சீரகம் உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பொருட்களை இடித்து பயன்படுத்துவதன் மூலம் இயல்பான இயற்கையான சுவையதிகரிக்கும். மேலும் கை உரல் மூலம் உணவு தயாரிக்கும் போது நீண்ட நேரத்திற்கு உணவு கெட்டுப் போவதில்லை. மாறாக மிக்சி கிரைண்டர் பயன்படுத்தும் போது சில மணிநேரங்களிலேயே உணவு கெட்டுப்போய் விடுகிறது. 

 


இதற்கு முழுமுதற் காரணம் இயந்திரப்பயன்பாட்டின் போது உணவுகள் செயற்கையான வெப்பத்தால் சூடேறி விரைவாக கெட்டுவிடுவது கை உரல் பயன்பாட்டின் போது தவிர்க்கப்படும் என்று கரோனா கால சமூக செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்லாலான கை உரலை வழங்கி இயற்கை மருத்துவர் தங்க சண்முக சுந்தரம் அனைவரும் பாரம்பரியத்துக்கு மாற வேண்டும் கொரோனாவை விரட்ட இயற்கை மருத்துவம் நோயெதிர்ப்பு சக்தி இவைகளே உதவும் அதற்கான உணவு முறைகளை அனைவரும் சாப்பிட வேண்டும். 

 

கரோனா நோயைப் பற்றி பீதியடையாமல் ஆரோக்கியமாக வாழ எதிர்காலத்தில் இளைஞர்கள் இரசாயனமில்லா வேளாண்மையை கையில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்க செயலாளர் இயற்கை மருத்துவர் தங்க சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். 

 

இந்நிகழ்ச்சிக்கு கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க தலைவர் காசிபிச்சை முன்னிலை வகித்து அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் உலக அழிவிற்கு காரணமாய் பல்லுயிர்ப் பெருக்கத்தினை அளித்ததன் விளைவினை கொரோனா கற்றுத்தந்ததாக உணர வேண்டும் என்றார். மேலும் இயற்கை வாழ்வியலுக்கு மாற வேண்டும் என்றார். 

 

இந்நிகழ்ச்சியில் கொரோனா காலத்தில் சிறப்பாக களப்பணிகளை செய்தவர்களுக்கு பரிசாக மினி கல் உரல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்சிறந்த தூய்மை காவலர்கள் சேவைக்கான பரிசினை இலந்தைக்கூடம் ஊராட்சியில் பணி புரியும் தூய்மை காவலர் மாரியாயி அவர்களுக்கும் அண்மையில் கொரோனா காலத்தில் தனது பங்களிப்பாக 5 ஆண்டுகாலமாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த உண்டியல் பணத்தில் நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கும் வகையில் 3000 ரூபாய் செலவில் குந்தபுரம் கிராமத்தில் கிராம மக்களுக்கு மூலிகை வெதுநீர் வழங்கிய கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7 ஆம் வகுப்பு மாணவி அபி சக்திவேல் தனது தந்தையை இழந்து வறுமையில் வாடிய போதும் இளம் வயதில் சிறந்த சமூக சிந்தனையோடு தனது கடமையை சமூகத்திற்காக செய்த சேவைக்கான பரிசாக கல் உரல் வழங்கப்பட்டது. 

 

இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பலதா அவர்கள் தனது குழுவினருடன் இரவு பகல் என பாராமல் முகக்கவசம் தயாரித்து வழங்கிய மகளிர் சுய உதவி குழுவினரின் செயலைப் பாராட்டும் விதமாக பரிசாக கை உரல் வழங்கப்பட்டது.


வாழை இலை குளியல் பயிற்சி முறையை கற்றுத் தந்த இயற்கை மருத்துவர்களுக்கான பரிசாக கை உரலை இயற்கை மருத்துவர் பழனி பெற்றுக் கொண்டார். இலந்தைக்கூடம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கரோனா காலத்தில் சிறந்த முறையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கவல்ல  மூலிகை சூப், எலுமிச்சை பானகம், வாழை இலைக் குளியல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திய பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு பரிசாக இலந்தைக்கூடம் ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியலிங்கம் மற்றும் துணைத் தலைவர் விஜயலெட்சுமி அவர்களிடம் கல் உரல் வழங்கப்பட்டது.

 


கரோனா காலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு பலரது உதவியுடன் தொடர்ந்து உணவு வழங்கிய சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமானூர் வரதராஜன் சமூக ஆர்வலருக்கு  கல்லாலான கை உரல் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கரோனா காலத்தில் முகக்கவசம், தன்னார்வலர்களின் உதவியோடு பல ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் கபச் சுரக்குடிநீர் என பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய சமூக ஆர்வலர் வெற்றியூர் சுயம்பிரகாசன் அவர்களது சேவையைப் போற்றும் வகையில் கல்லாலான கை உரல் பரிசாக வழங்கப்பட்டது. கொரோனா விழிப்புணர்வு அரசின் நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவிகள் எழுதிய சிறந்த கட்டுரைக்கான பரிசாக மாணவி அபிநயாவுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.


கரோனாவால் ஏற்பட்ட இயற்கை மாற்றங்கள் பேச்சுப் போட்டியில் நிசாலினி பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.  கரோனாவை விரட்ட அரசு கையாண்டு வரும் பாரம்பரிய மருத்துவமுறைகள் 
இயற்கை மருத்துவ முறைகளை பாரம்பரிய உணவு வகைகளை கற்பித்து வருபவரும் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுவதோடு தங்களது பள்ளியில் குறுங்காடுகள் அமைத்தும் 5000 பேர் வசிக்கும் திருமழபாடி கிராம மக்களுக்கு கொரோனா காலத்தில் நோயெதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கும் வகையில் அதிக சத்துக்களை கொண்ட மாப்பிள்ளை சம்பா கஞ்சி வழங்கியும் கொரோனாவை எதிர்கொள்ள கிருமி நாசினி வழங்கியும் தலைமை ஆசிரியராக பணியாற்றும் பள்ளியில் மாணவிகளின் குடும்பத்தினருக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கியும் களப்பணியாற்றி வரும் திருமழபாடியைச் சேர்ந்த அல்லி அவர்களுக்கு  கல்லாலான கை உரல் பரிசாக வழங்கப்பட்டது. 

 

கரோனா காலத்தில் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உண்டான சூழலை உருவாக்கும் விதமாக அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் பாலம் அருகே ஆற்றங்கரையில் குறுங்காடுகளை அமைக்கப் பாடுபட்டு பராமரித்து வரும் திருமானூரைச் சேர்ந்த அக்னி சிறகுகள் அமைப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கார்த்திக் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்லாலான கை உரல் பரிசாக வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் பல ஆயிரக்கணக்கான ஏழை எளியோருக்கு உதவும் போதும் கண்ணியத்தோடு தாம்பூலத்தில் வைத்து அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கிய ஸ்வீட் டிரஸ்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிறந்த சமூக செயல்பாட்டாளருக்கான விருதினை ஜனாதிபதி கையால் விருது வாங்கிய அரியலூர் மாவட்டம் விகைகாட்டி அருகே உள்ள நெருஞ்சிக்கோரை கிராமத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் நெருஞ்சிக்கோரை இளவரசன் அவர்களுக்கு கல்லாலான கை உரல் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முடிவில் இயற்கை மருத்துவர் பழனி நன்றி கூறினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்