Skip to main content

செவிலியர் கொலையில் புதிய திருப்பம்; மேலும் இருவருக்கு காவல்துறை வலை..

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

Thiruelveli nurse case police investigated

 

நெல்லை மாவட்டத்தின் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த வேலாயுதம். அவரது மனைவி ராஜலட்சுமி செவிலியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதியர் தங்களின் மகளான அனிதாவை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூலைக்கரைப்பட்டி பக்கமுள்ள கல்லத்தியிலிருக்கும் தங்களது உறவினரின் மகனான அபிமன்யு என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அனிதாவிற்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததை மறைத்து அவரைத் தனக்குத் திருமணம் செய்து வைத்ததைக் காலதாமதமாக அபிமன்யுவிற்குத் தெரியவந்திருக்கிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட இந்தக் கருத்துவேறுபாட்டால் அனிதா, தன் இரு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு தன் தாய் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார். இதையடுத்து விஷயத்தை ராஜலட்சுமியிடம் அபிமன்யு கூறி அவரை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தபோது பலனில்லாமல் போயிருக்கிறது. இதனிடையே நர்ஸ் ராஜலட்சுமிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்தது அவரது கணவர் வேலாயுதத்திற்குத் தெரிய வந்திருக்கிறது. அவரும் தனது மனைவியைக் கண்டித்தபோது ராஜலட்சுமி அதைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இதனால் கடும் ஆத்திரம் அடைந்திருக்கிறார் வேலாயுதம்.

 

இந்த நிலையில் ராஜலட்சுமியை கொலை செய்ய கணவர் வேலாயுதம், அவரது மருமகன் அபிமன்யு இருவரும் சேர்ந்து திட்டம் போட்டிருக்கின்றனர். இதன் பொருட்டு கடந்த 17ம் தேதி இரவு 9 மணியளவில் இருவரும் ராஜலட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அதுசமயம் பக்கத்துவீட்டு அன்பழகன் என்பவருடன் தன் மனைவி ராஜலட்சுமி ஒன்றாக இருந்ததைக் கண்டு வேலாயுதம் ஆவேசமடைந்திருக்கிறார். ஆத்திரம் காரணமாக வேலாயுதமும் அபிமன்யுவும் அரிவாளால் இருவரையும் வெட்டியிருக்கிறார்கள். இதில் ராஜலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். படுகாயமடைந்த அன்பழகன் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Thiruelveli nurse case police investigated


 

அனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் மூலைக்கரைப்பட்டி இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வேலாயுதம், அபிமன்யு இருவரையும் கைது செய்தனர். ஆனாலும் ராஜலட்சுமியின் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்புள்ளது எனவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் குற்றம் சாட்டிய  அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்ததோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து மேல் விசாரணை நடத்திய போலீஸார் இந்த சம்பவத்தில் மேலும் இருவருக்குத் தொடர்பு இருந்ததை அறிந்திருக்கிறார்கள்.

 

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காளியப்பன் நம்மிடம், "நர்ஸ் கொலையில் ஏற்கனவே இருவரைக் கைது செய்துள்ளோம். எங்களின் தீவிர விசாரணையில் கல்லத்தி கிராமத்திலிருக்கும் அபிமன்யுவின் அக்காவின் கணவரான மோகன்ராஜ்(40) என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு அவரது மகனான இளவரசன் இதில் அவர்களுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார் என்பதும் தெரியவர அவர்கள் இருவரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். தலைமறைவான அவர்கள் இருவரையும் தேடிவருகிறோம்" என்றார்.

 

இதன் பிறகே உடற்கூறாய்வு செய்யப்பட்ட நர்ஸ் ராஜலட்சுமியின் உடலைப் பெற்றுக்கொண்ட அவரது உறவினர்கள் பின்னர் உடலை அடக்கம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்